தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் கீழ்மட்ட வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக, தமிழகத்தில் சென்னை உட்பட 20 மாவட்டங்களில் இன்று (செப்டம்பர் 2) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், ஏனைய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (செப்டம்பர் 3) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பதிவாக வாய்ப்புள்ளது. அதேபோல், காரைக்கால் மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக கடலோரப் பகுதிகள், தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள குமரிக்கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.



