கனமழை காரணமாக காரைக்கால், புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது இன்று மேற்கு அல்லது வடமேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும். மேலும் 22-ம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு அல்லது வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறக்கூடும்.
இதன் காரணமாக தமிழகத்தில் இன்று பெரும்பாலான இடங்களிலும், நாளை முதல் 23-ம் தேதி வரை ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களிலும் 19, 20 தேதிகளில் மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களிலும், 21-ம் தேதி மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, நாகப்பட்டினம் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்த நிலையில் கனமழை காரணமாக காரைக்கால், புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருவதால், மாணவர்களின் பாதுகாப்பு கருதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



