வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று உருவானது. கோவை, நீலகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஒடிசா கடலோரப் பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மெதுவாக வடக்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடைய கூடும். மேலும், தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. கோவை மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் இன்று சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், நெல்லை மாவட்ட மலைப் பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 29, 30-ம் தேதிகளில் கோவை மற்றும் திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, தென்காசி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். வரும் 31 முதல் ஜூன் 2-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Read More: சமையல் எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம்…! சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!