இன்றைய காலகட்டத்தில் டீனேஜர்களில் கூட ஹைப்பர் டென்ஷன் இருப்பது கண்டறியப்பட்டு வருகிறது. இந்த மாற்றமானது மிகவும் அமைதியாக, யாரும் எதிர்பார்க்காத ஒன்றாக இருக்கிறது. சொல்லப்போனால், பலருக்கு தங்களுக்கு ஹைப்பர் டென்ஷன் இருப்பதே தெரியாமல் தங்களுடைய இயல்பான வாழ்க்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
இரத்த அழுத்தம் என்பது, இதயம் தமனிகளின் சுவர்கள் வழியாக இரத்தத்தை தள்ளி அனுப்பும் போது ஏற்படும் அழுத்தம். இந்த அழுத்தம் இயல்பான அளவில் இருந்தால் உடல் நன்றாக செயல்படும். ஆனால் தமனி சுவர்களில் தொடர்ந்து அதிக அழுத்தம் ஏற்பட்டால், அது இதயத்திற்கும் இரத்த நாளங்களுக்கும் தீங்கு விளைவிக்கத் தொடங்கும்.
இந்த நிலை நீண்ட காலம் தொடர்ந்தால் இதய தசைகள் பலவீனப்படலாம், தமனிகள் சேதமடையும், மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரக கோளாறுகள்போன்ற உயிருக்கு ஆபத்தான பிரச்சனைகள் ஏற்படலாம். மருந்துகள், பரிசோதனைகள், மருத்துவ ஆலோசனைகள் என பல முயற்சிகள் செய்யப்பட்டாலும், ஒரு எளிய பழக்கம் மட்டும் இந்த சிக்கலை பெருமளவில் குறைக்க உதவுகிறது.அதுதான் நடைப்பயிற்சி.
நடைபயிற்சி என்பது இதயத் துடிப்பை இயல்பாக உயர்த்தும் மிக எளிய உடற்பயிற்சி. தொடர்ந்து நடைபயிற்சி செய்யும் போது இதய தசைகள் வலுப்பெறுகின்றன. வலுவான இதயம், இரத்தத்தை உடல் முழுவதும் திறம்பட செலுத்தி, தமனிகளில் ஏற்படும் அழுத்தத்தை குறைக்கிறது. இதனால் இரத்த அழுத்தம் இயல்பாக கட்டுப்பாட்டுக்குள் வரும்.
உடல் பருமன் என்பது இதயம் மற்றும் இரத்த நாளங்களில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும் முக்கிய காரணிகளில் ஒன்று. நடைபயிற்சி எடையைக் குறைக்கும் திறன் கொண்டதால், இதய நோய் அபாயமும் மறைமுகமாக குறைகிறது. மேலும், தமனி செயல்பாட்டை மேம்படுத்தும் தன்மை நடைபயிற்சியிடம் உள்ளது. நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவது நடைபயிற்சியின் மற்றொரு நன்மை. இதனால் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும். இரத்த சர்க்கரை சரிவர இயங்கினால், உயர் இரத்த அழுத்த அபாயமும் குறையும்.
எவ்வளவு நேரம் நடப்பது நல்லது? ஆரம்பத்தில் 10 முதல் 15 நிமிடங்கள் நடப்பது போதுமானது. படிப்படியாக உங்கள் வேகத்தையும் தூரத்தையும் அதிகரிக்கலாம். நடக்கும்போது உங்கள் தோரணையைக் கண்காணிப்பது மிகவும் முக்கியம். தலை குனிந்து நடக்கக் கூடாது. நீங்கள் நிமிர்ந்து முன்னோக்கிப் பார்த்து நடக்க வேண்டும். கைகளை அசைத்துக்கொண்டே நடப்பது நல்லது.



