இமாச்சலப் பிரதேசம்: இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் ஏற்பட்ட பயங்கர பேருந்து விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 11 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சோக சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சம்பா மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 8) காலை சுமார் 7.15 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பைரகார் பகுதியில் இருந்து சம்பா நோக்கி தனியார் பேருந்து ஒன்று பயணித்துக் கொண்டிருந்தது.
பைரகார்-டிஸ்சா சாலையில் உள்ள மலைப்பாதையில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது. இதனால் பேருந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து அருகில் இருந்த பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
மேலும் தகவல் கிடைத்ததும் காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பொதுமக்கள் மற்றும் மீட்புப் படையினர் இணைந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 11 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓட்டுநரின் தவறு, சாலையின் நிலை அல்லது பேருந்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விபத்துக்கான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
பிரதமர் மோடி இரங்கல்:
சம்பா மாவட்டத்தில் நடைபெற்ற இந்த கோர விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது அனுதாபங்களை தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இமாச்சலப் பிரதேசத்தின் மலைப்பகுதிகளில் குறுகிய சாலைகள் மற்றும் ஆபத்தான வளைவுகள் அதிகம் காணப்படுகின்றன. இதுபோன்ற மலைப்பாதைகளில் ஏற்படும் சாலை விபத்துகள் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் நிலையில், சம்பா மாவட்டத்தில் ஒரே விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



