மொரோக்கோவில் வரலாற்று சாதனை!. நாட்டின் முதல் பெண் பிரதமராக ஃபாத்திமா நியமனம்!.

Morocco pm 30kb

மொரோக்கோ நாட்டின் பிரதமராக ஃபாத்திமா எஸ்ஸஹ்ரா எல் மன்சூரியை (Fatima Ezzahra El Mansouri – 50) மன்னர் ஆறாம் முகமது நியமித்துள்ளார். இதன் மூலம் மொரோக்கோ நாட்டின் முதல் பெண் பிரதமர் என்ற வரலாற்று சாதனையை அவர் படைத்துள்ளார். மேலும் அரபு உலகில் பிரதமர் பதவி வகிக்கும் 3-வது பெண்மணி என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.


புதிய அரசை அமைக்கும் பொறுப்பை மன்னர் வழங்கியதைத் தொடர்ந்து, தொலைக்காட்சியில் உரையாற்றிய எல் மன்சூரி, இந்நாள் “உண்மையிலேயே வரலாற்று சிறப்புமிக்க நாள்” என்று குறிப்பிட்டார். “நமது நாட்டின் வரலாற்றிலேயே முதல்முறையாக அரசை வழிநடத்தும் பொறுப்பு ஒரு பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது எனக்கு மட்டுமல்ல, மொரோக்கோவின் அனைத்து பெண்களுக்கும் பெருமை சேர்க்கும் விஷயம்” என்றும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், எல் மன்சூரியின் ‘Authenticity and Modernity Party’ (PAM) கட்சி மொத்தம் உள்ள 395 இடங்களில் 97 இடங்களைக் கைப்பற்றி மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும், தனிப்பெரும்பான்மைக்கு 198 இடங்கள் தேவை என்பதால், பிற கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அரசை அமைக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.

வரும் 2030-ஆம் ஆண்டு ஃபிஃபா (FIFA) உலகக் கோப்பை கால்பந்து தொடரை மொரோக்கோ, ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவுள்ள நிலையில், இதற்கான பல பில்லியன் டாலர் முதலீடுகளை புதிய அரசே கையாளவுள்ளது.

யார் இந்த ஃபாத்திமா எல் மன்சூரி? 1976-இல் மாரகேஷ் (Marrakesh) நகரில் பிறந்த இவர், பிரான்ஸின் மாண்ட்பெலியர் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு பயின்ற வழக்கறிஞர் ஆவார். 2009-ஆம் ஆண்டு மாரகேஷ் நகரின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் உள்ளாட்சி அரசியலில் தடம் பதித்தார். அந்நகரின் முதல் பெண் மேயரும் இவரே.

அமைச்சரவை பொறுப்பு: 2021-ஆம் ஆண்டு முதல் நாட்டின் நகர திட்டமிடல், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புறக் கொள்கை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். 2023-இல் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பிறகு பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டங்களை முன்னின்று நடத்தியதில் இவருக்கு முக்கியப் பங்குண்டு.

1newsnationuser5

Next Post

40 ஆண்டுகளில் முதல் முறை... ஆசிய விளையாட்டில் பதக்கமின்றி திரும்பும் இந்திய டென்னிஸ் அணி!.

Thu Oct 1 , 2026
ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் டென்னிஸ் பிரிவில் இந்திய அணி ஒரு பதக்கம் கூட வெல்லாமல் ஏமாற்றத்துடன் வெளியேறியுள்ளது. கடந்த 1986-ஆம் ஆண்டிற்குப் பிறகு, ஏறத்தாழ 40 ஆண்டுகளில் ஆசிய விளையாட்டு டென்னிஸ் போட்டிகளில் இந்தியா பதக்கம் எதுவுமின்றித் திரும்புவது இதுவே முதன்முறையாகும். ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதிப் போட்டியில், இந்தியாவின் முன்னணி வீரா் சுமித் நாகல் (Sumit Nagal), சீனாவின் யிபிங் வூவிடம் (Yibing Wu) 4-6, 4-6 என்ற […]
India tennis 30kb

You May Like