தமிழகத்தில் எச்ஐவி – எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 7,618 குழந்தைகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை நேற்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் எச்ஐவி – எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 7,618 குழந்தைகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை நேற்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; ஆண்டுதோறும் ஜூன் 14-ம் தேதி உலக குருதி கொடையாளர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி 2009- 10-ம் ஆண்டில் எச்ஐவி – எய்ட்ஸ் தொற்று பாதித்த குழந்தைகளுக்கு, தமிழக அரசு சார்பில் அறக்கட்டளை தொடங்குவதற்கு ரூ.5 கோடி நிதி கொடுத்தார். அந்த நிதி ஆதாரத்தின் மூலம், அதில் கிடைக்கப்பெறுகிற வட்டி தொகையை கொண்டு 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் கல்வி, மருத்துவம் மற்றும் ஊட்டச்சத்துக்கு ஆண்டுதோறும் உதவி வழங்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசின் பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷனில் இருந்து ரூ.25 கோடி நிதி, தொகுப்பு நிதியாக வைப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதில் இருந்து கிடைக்கும் நிதி ஆதாரத்தை கொண்டு எச்ஐவி – எய்ட்ஸ் தொற்றுக்கு உள்ளான, பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிதி உதவியாக மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்துக்காக 7,618 குழந்தைகளுக்கு ரூ.1.89 கோடியில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
எச்ஐவி – எய்ட்ஸ் தொற்று, பால்வினை நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முதல்கட்டமாக 11 கல்லூரிகளில் புதிதாக செஞ்சுருள் சங்கங்கள் தொடங்கப்பட்டுள்ளன. வளரிளம் பருவத்தினருக்கு எச்ஐவி – எய்ட்ஸ் தொற்று தொடர்பான விழிப்புணர்வை வழங்க பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. 11 பள்ளிகளில் வாழ்வியல் திறன் பயிற்சி தொடங்கப்படவுள்ளது என்றார் .