கடலில் ஒரே நேரத்தில் 5 புயல்கள் உருவாகியிருப்பது வானிலை ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதில் 3 புயல்கள் அதிதீவிர நிலையை எட்டியுள்ள நிலையில், மற்ற 2 புயல்களும் வலுவான புயல்களாக உருவெடுத்துள்ளன. பசிபிக் பெருங்கடலை மையமாகக் கொண்டு ஏற்பட்டுள்ள இந்த தொடர் புயல் செயல்பாடு, கடலின் அதிகரித்து வரும் வெப்பநிலை குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
தற்போதைய நிலவரப்படி பசிபிக் பெருங்கடல் பகுதியில் போலோ (Polo), சுரிகே (Surigae), நோலோ (Nolo), ஓடாலிஸ் (Odalys), ரேச்சல் (Rachel) என 5 புயல்கள் ஒரே நேரத்தில் நிலைகொண்டுள்ளன. இவற்றில் போலோ, சுரிகே மற்றும் நோலோ ஆகியவை அதிதீவிர புயல்களாக வலுப்பெற்றுள்ளன. ஓடாலிஸ் மற்றும் ரேச்சல் ஆகியவை அதற்கு குறைவான தீவிரத்துடன் நீடிக்கின்றன.
இந்த புயல்களின் நகர்வும் வெவ்வேறு திசைகளில் காணப்படுகிறது. மெக்சிகோ கடற்கரைக்கு அருகிலுள்ள கிழக்கு பசிபிக் பகுதியில் உருவான போலோ புயல் குறுகிய காலத்திலேயே வேகமாக வலுப்பெற்றுள்ளது. மத்திய பசிபிக் பகுதியில் நிலைகொண்டுள்ள நோலோ புயல் ஹவாய் தீவுகளை நோக்கி நகர்ந்து வருகிறது.
மேற்கு பசிபிக் பகுதியில் உருவான சுரிகே புயலும் தீவிரமடைந்து தைவான் நோக்கி நகர்கிறது. இதற்கிடையே ஓடாலிஸ் மற்றும் ரேச்சல் புயல்களின் நகர்வும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
ஒரே நேரத்தில் பல புயல்கள் உருவாவது முற்றிலும் புதிதான நிகழ்வு அல்ல. ஆனால் ஒரே காலகட்டத்தில் 3 புயல்கள் அதிதீவிர நிலையை அடைவது மிகவும் அரிதாக பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்பு 2015-ம் ஆண்டு மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் ஒரே நேரத்தில் 3 அதிதீவிர புயல்கள் உருவாகியிருந்தன. தற்போது மீண்டும் அதேபோன்ற ஒரு சூழல் உருவாகியுள்ளது.
புயல்கள் உருவாவதற்கு கடலின் வெப்பநிலை முக்கிய காரணிகளில் ஒன்றாக உள்ளது. பொதுவாக கடல் நீரின் வெப்பநிலை சுமார் 26.5 டிகிரி செல்சியஸைத் தாண்டும்போது, வளிமண்டலத்தில் அதிக அளவு நீராவி சேர்ந்து புயல் அமைப்புகளுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது.
தற்போது கடல் மேற்பரப்பின் வெப்பநிலை பல பகுதிகளில் வழக்கத்தைவிட அதிகமாக இருப்பதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எல் நினோ உள்ளிட்ட கடல்-வளிமண்டல மாற்றங்களுடன் உலக வெப்பமயமாதலின் தாக்கமும் சேரும்போது, புயல்கள் வேகமாக வலுப்பெறுவதற்கான சூழல் உருவாகலாம்.
குறிப்பாக கடல் நீர் அதிக வெப்பமடையும் காலங்களில், ஆரம்பத்தில் சாதாரண காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக இருக்கும் அமைப்புகள் கூட குறுகிய நேரத்தில் வலுவான புயல்களாக மாறும் வாய்ப்பு அதிகரிக்கிறது. இதனால் ஒரே நேரத்தில் பல புயல்கள் தீவிரமடையும் சூழலை வானிலை ஆய்வாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
Also Read: அக்டோபர் 1 முதல் ஏசி, டிவி உள்ளிட்ட பொருட்கள் விலை அதிகரிப்பு.. எவ்வளவு தெரியுமா?



