அந்தமான் தீவுகளுக்கு தேன்நிலவு சென்ற இடத்தில், மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்ட காரணத்தால் கணவர் அவரை கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த நிகில் மிஸ்ரா என்பவருக்கும், ராம்பகர்தால் பகுதியைச் சேர்ந்த பெண்ணிற்கும் மே 30, 2023 அன்று திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது பெண்ணின் வீட்டார் ரூ.20 லட்சம் ரொக்கம், ஒரு கார் மற்றும் ரூ.40 லட்சம் மதிப்பிலான வரதட்சணைப் பொருட்களை வழங்கியதாக கூறப்படுகிறது. இருப்பினும், டெல்லியில் உள்ள கணவர் வீட்டிற்குச் சென்றதிலிருந்து வரதட்சணை போதவில்லை என மாமியார் மற்றும் நாத்தனார் அவரைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஜூலை 4, 2023 அன்று தம்பதியினர் தேன்நிலவுக்காக அந்தமான் தீவுகளுக்கு சென்றனர். அங்கு தங்கியிருந்தபோது அப்பெண்ணுக்கு கடுமையான வயிற்று வலியுடன் மாதவிடாய் ஏற்பட்டுள்ளது.
மாதவிடாய் குறித்து முன்கூட்டியே ஏன் தெரிவிக்கவில்லை எனக் கூறி ஆத்திரமடைந்த கணவர் நிகில் மிஸ்ரா, மனைவியை அறைந்தும், உதைத்தும், கழுத்தை நெரித்தும் கொடூரமாகத் தாக்கியுள்ளார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த விடுதி ஊழியர்கள், அவரை மீட்டுக் காப்பாற்றியுள்ளனர். இதன்பின்னர், பெண்ணின் தந்தையை தொடர்புகொண்ட கணவர், தனது மனைவியை உடனடியாக அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார்.
தேன்நிலவிலிருந்து திரும்பிய பின்னரும், ஜூலை 14, 2023 அன்று அப்பெண் கணவர் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். மேலும், அவரது வரதட்சணைப் பொருட்களும் திருப்பித் தரப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், ராம்பகர்தால் காவல்நிலையத்தில் கணவர் நிகில் மிஸ்ரா, மாமியார் சஞ்சு மிஸ்ரா மற்றும் நாத்தனார் நேஹா பாண்டே ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.



