ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் யூடியூபர் மற்றும் நாளிதழ் செய்தியாளர்களை தாக்கியதாக எழுந்த புகாரில், தமிழக வெற்றிக் கழகத்தின் சோளிங்கர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கபில், அவரது சகோதரர் தனஞ்செழியன் உள்ளிட்டோர் மீது 21 நாட்களுக்குப் பிறகு காவல்துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சோளிங்கரில் உள்ள திரையரங்கம் ஒன்றில் திரைப்படம் பார்த்துவிட்டு வெளியே வந்த எம்.எல்.ஏ கபிலிடம், யூடியூபர் சிவா என்பவர் படம் குறித்த விமர்சனத்தை கேட்க முற்பட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, எம்.எல்.ஏ அவரை தாக்க முயன்றதாகக் கூறப்படும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இதன் தொடர்ச்சியாக, தனது ஆதரவாளர்களுடன் சென்ற எம்.எல்.ஏ கபில், யூடியூபர் சிவாவை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று தாக்கியதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களான அரங்கநாதன் மற்றும் கல்யாணசுந்தரம் ஆகியோரையும் எம்.எல்.ஏ தரப்பினர் தாக்கியதாக புகார் எழுந்தது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேசமயம், நிருபர்களின் செல்போனில் பதிவான தாக்குதல் வீடியோக்களை காவல் அதிகாரி ஒருவர் அழித்ததாகவும் கூடுதல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இத்தாக்குதல் சம்பவத்தை கண்டித்துப் பத்திரிகையாளர் சங்கங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும், பாதிக்கப்பட்ட செய்தியாளர்கள் சோளிங்கர் காவல் நிலையத்திலும், ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபினிடமும் நேரில் புகார் மனு அளித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
பத்திரிகையாளர்களின் தொடர் அழுத்தம் மற்றும் கண்டனங்களை தொடர்ந்து, சம்பவம் நடந்த 21 நாட்களுக்குப் பிறகு சோளிங்கர் தவெக எம்.எல்.ஏ கபில், அவரது சகோதரர் தனஞ்செழியன் உள்ளிட்ட சிலர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read More : மக்களை தூங்கவிடாத டவுசர் கேங்..!! நள்ளிரவில் திக் திக்..!! வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..!!



