தெற்குப் பனாமா பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 7.7 என்ற சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மத்திய மற்றும் தென் அமெரிக்கப் பிராந்தியங்களில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பசிபிக் பெருங்கடல் கடற்கரையோரம் உள்ள பிடலோசா அரிபா என்ற தொலைதூரப் பகுதிக்கு தென்மேற்கே சுமார் 10 கி.மீ (6 மைல்) தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, பனாமா, கொலம்பியா, ஈக்வடார், நிகரகுவா மற்றும் குவாத்தமாலா ஆகிய 11 நாடுகளுக்கு அமெரிக்க தேசிய வானிலை ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்தது. மேலும் சிலி நாட்டின் கடற்படை நீரியல் மற்றும் கடல்சார் சேவைப் பிரிவும் சுனாமி எச்சரிக்கையைப் பிறப்பித்தது.
தலைநகர் பனாமா சிட்டியில் நிலநடுக்கத்தின் தாக்கம் கடுமையாக உணரப்பட்டது. கட்டிடங்கள் குலுங்கியதால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.
பனாமா நகரத்திற்கும் நிலநடுக்க மையத்திற்கும் இடைப்பட்ட பகுதியான பெனோநோமே நகரில், வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடத்தின் கோபுரமும், ஒரு குடியிருப்புப் பகுதியின் சில பால்கனிகளும் இடிந்து விழுந்ததை ‘லா பிரென்சா’ நாளிதழ் வெளியிட்டுள்ள காணொளிகள் காட்டுகின்றன.
பாதுகாப்பு நடவடிக்கையாக பனாமா கல்வி அமைச்சகம் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளது. இதற்கிடையில், நாட்டின் அதிபர் ஜோஸ் ராகுல் முலினோ பொதுமக்கள் அமைதிகாக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “நடந்த சம்பவங்களைக் கொண்டு யாரும் பதற்றத்தையோ குழப்பத்தையோ ஏற்படுத்த வேண்டாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
நடப்பாண்டில் இப்பகுதியில் பல கடுமையான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூன் மாதம் வெனிசுலாவின் வடக்குப் பகுதியில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களால் பெரிய அளவிலான சேதங்கள் ஏற்பட்டதோடு, குறைந்தது 6,500 பேர் உயிரிழந்தனர். மேலும், கடந்த ஆகஸ்ட் மாதம் கொலம்பியாவில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 289 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



