தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று தாம்பரத்தில் நடைபெற்ற அரசு விழாவில், சுகாதாரத்துறை சார்பில் 110 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக் கட்டடத்தை திறந்து வைத்தார். மேலும், பல்லாவரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.1,672.52 கோடி மதிப்பில் 20,021 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், ”தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கப்போகிற மாநிலக் கல்விக் கொள்கையை நான் வெளியிட்டேன். இன்றைக்கு இந்த மாவட்ட மக்களின் உடல்நலனுக்கு உறுதுணையாக இருக்கப்போகின்ற செங்கல்பட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை தாம்பரத்தில் திறந்து வைத்தேன். கல்வியும், மருத்துவமும் தான் நம்முடைய அரசின் இரு கண்கள் என்று நான் அடிக்கடி சொல்வேன், அதற்கு இந்த நிகழ்ச்சிகள் எடுத்துக்காட்டு.
20,021 பேருக்குப் பட்டா வழங்குகின்ற இந்த சிறப்பான விழாவை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஏற்பாடு செய்திருக்கிறார். பொதுவாக, நான் ஒரு அரசு நலத்திட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றால், நான் கேட்கும் முதல் கேள்வியே இன்றைக்கு எத்தனைப் பேருக்கு பட்டா வழங்கப் போகிறோம்? என்று தான். ஏனென்றால், ஒரு மனிதனுக்கு அடிப்படைத் தேவை உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம். இதில், உணவும் உடையும் எளிதாக கிடைத்து விடலாம் ஆனால், இருக்கும் நிலம் எளிதாக கிடைத்து விடாது. காலுக்கு கீழ் சிறிது நிலமும், தலைக்கு மேல் ஒரு கூரையும் இன்னும் பலருக்கு கனவு தான். அதனால் தான், பட்டா வழங்குவதில் நான் எப்போதும் தனி கவனம் செலுத்துவேன்.
திமுக அரசு பொறுப்பேற்ற கடந்த 2021-லிருந்து, தற்போது வரைக்கும் 17 லட்சத்து 74 ஆயிரத்து 561 பேருக்கு பட்டா வழங்கியிருக்கிறோம். தென்குமரியிலிருந்து சென்னை வரைக்கும் சமச்சீரான வளர்ச்சி இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பார்த்துப் பார்த்து திட்டங்களை நாம் செயல்படுத்துகிறோம். தொழில் நிறுவனங்களை கொண்டு வருகிறோம். வேலைவாய்ப்புகளை உறுதி செய்கிறோம். இதனால் தான் 11.19 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியோடு திமுக ஆட்சியில் இன்றைக்கு தமிழ்நாடு தலை நிமிர்ந்து நிற்கிறது என்றார்.