9 சவரன் நகைக்காக இளைஞர் அஜித் குமார் முதுகில் இவ்வளவு அடி அடித்திருக்கிறீர்கள் என்றால், ஆயிரம் கோடி ஊழல் செய்த அமைச்சர்கள் முதுகில் எவ்வளவு அடி அடிக்க வேண்டும் என்று தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து அவதூறாக பேசியதாகக் கூறப்படும் திமுக எம்பி ஆ. ராசா மீது கண்டனம் தெரிவிக்க சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன் தமிழிசை போராட்டத்தில் ஈடுபட முயன்றார். இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்து காவல் வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை செளந்தராஜன், உள்துறை அமைச்சரை மோசமான வார்த்தையில் ஆ. ராசா பேசுவார். அதை அனுமதிப்பார்கள். ஆனால் நாங்கள் அதைக் கண்டித்து, எங்கள் குரலை எழுப்பினால் அதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. எங்கள் கண்டன குரலை மடப்புரத்திற்கும் சேர்த்து தான் எழுப்ப வந்துள்ளோம்.
9 பவுன் நகை.. குறைந்தது ரூ.4.5 லட்சம் இருக்கும். அந்த நகைக்காக சந்தேகத்துடன் முதுகில் இவ்வளவு அடி அடித்தீர்கள் என்றால், ஆயிரம் கோடி ஊழல் செய்த அமைச்சர்கள் முதுகில் எவ்வளவு அடி அடிக்க வேண்டும்? வீடியோவை பார்க்கும் போது கண்களில் கண்ணீர் வடிகிறது. தமிழ்நாட்டில் யார் ஆணையின் பேரின் போலீசார் இப்படி செய்திருக்கிறார்கள். சீருடை கூட இல்லாமல் எப்படி காட்டு மிராண்டி தனமான தாக்குதல் நடந்துள்ளது.
30 இடங்களில் உள்காயம் இருக்கிறது. முதலமைச்சர் ஸ்டாலின் இதற்கு பதில் சொல்ல வேண்டும். காவல்துறை யார் கையில் இருக்கிறது. கண் துடைப்பு என்பது போல் ஏதோ அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கிறார்கள். இதெல்லாம் போதாது. ஒரு மரணம் என்றாலும் அது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. தூத்துக்குடி சம்பவத்தின் போது எவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்தீர்கள்.
திமுக எதிர்கட்சியாக இருக்கும் போது, சாத்தான்குளத்தில் நடந்த கொலை சம்பவத்தில் இறந்தவரின் வீட்டிற்கு கனிமொழி சென்றார். அந்த விவகாரத்தை முன்னிறுத்தி, தமிழகம் முழுவதும் திமுக பெரிய ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. இப்போது இவர்கள் ஆட்சி காலத்தில் சிவகங்கையில் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.
ஏதோ பேருக்கு கண்டனத்தை பதிவு செய்யும் உதய நிதியும், கனிமொழியும் இப்போ எங்கே போனார்கள். அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆணை இல்லாமல் இது நடந்திருக்க முடியாது. அஜித் குமார் முதுகில் விழுந்த ஒவ்வொரு அடியும், தமிழகத்தில் சாமானியர்களின் முதுகில் விழுந்த அடி என்று ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
Read more: SSC Job: ஹவில்தார் பணிக்கான தேர்வு… ஜுலை 27-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…!