விவாகரத்து, ஜீவனாம்சம் மற்றும் சொத்து உரிமை தொடர்பான வழக்குகள் தொடர்ந்து நீதிமன்றங்களில் அதிகரித்து வரும் நிலையில், டெல்லி ஹைகோர்ட் முக்கியமான தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த தம்பதி ஒருவர், 2005-ஆம் ஆண்டு மும்பையில் இணைந்து ஒரு வீடு வாங்கியிருந்தனர். ஆனால், அடுத்த ஆண்டே இருவருக்கும் தகராறு ஏற்பட்டு தனித்தனியாக வாழ ஆரம்பித்தனர். பின்னர், கணவர் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடினார்.
விவாகரத்து வழக்கு விசாரணையில் இருக்கும் நிலையில், மனைவியுடன் சேர்ந்து வாங்கிய வீட்டின் மீது “நானே உரிமையாளர்” என்று கணவர் தனிப்பட்ட உரிமை கோரினார். இதை எதிர்த்து மனைவி மனு தாக்கல் செய்து, “வீடு வாங்கிய பணத்தில் பாதி தொகை எனக்கு சீதனமாக என் பெற்றோர் வழங்கியது. எனவே, அந்த வீட்டின் மீது எனக்கும் உரிமை உள்ளது” என்று வாதிட்டார்.
இந்த மனுவை விசாரித்த டெல்லி ஹைகோர்ட், “கணவன்–மனைவி இருவரும் சேர்ந்து வாங்கிய சொத்தை, கணவர் மட்டும் தனிப்பட்ட உரிமை கொண்டாட முடியாது. மாத தவணையை தனியாக செலுத்தியதாகக் கூறியும், முழு உரிமையை கோர முடியாது. இது பினாமி சொத்து பரிவர்த்தனைச் சட்டத்துக்கு எதிரானது” என்று அதிரடி தீர்ப்பு வழங்கியது.
இந்த உத்தரவு, குடும்பத் தகராறுகளில் சொத்து உரிமை குறித்த வழக்குகளுக்கு ஒரு முக்கிய முன்னுதாரணமாக கருதப்படுகிறது. குறிப்பாக, இணைந்து வாங்கிய சொத்தில் இருவருக்கும் உரிமை உள்ளது என்ற நிலைப்பாட்டை வலுப்படுத்துவதாக சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.
Read more: அமெரிக்காவில் 2 விமானங்கள் மோதி விபத்து.. துண்டான விமானத்தின் இறக்கை பகுதி.. பதற வைக்கும் வீடியோ..!