ஈரானுடனான போருக்கு மத்தியில் கச்சா எண்ணெய் விலையைக் குறைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதியளித்துள்ளார்.
ஈரானுடன் நடக்கும் போரில் அமெரிக்கா வெற்றி பெற்றவுடன் கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரியும் என்றும், பெட்ரோல் விலை லிட்டர் 2 டாலருக்கும் கீழே குறையும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கணித்துள்ளார். மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களாலேயே எரிபொருள் விலை உயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், சண்டை முடிவுக்கு வந்தவுடன் சந்தை நிலவரம் வேகமாக கட்டுப்பாட்டுக்குள் வரும் என்று தனது ‘Truth Social’ பக்கத்தில் தெரிவித்தார். மேலும், ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தைப் பெற அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் திட்டவட்டமாக எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே ஹார்மூஸ் நீரிணைப் பகுதியில் மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், சர்வதேச அளவில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு தோராயமாக 97 டாலராக உயர்ந்துள்ளது. இது கடந்த ஐந்து நாட்களில் 9 சதவீத அதிகரிப்பையும், கடந்த மாதத்தில் 19 சதவீத வளர்ச்சியையும் குறிக்கிறது. அமைதிக் காலத்தில் உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் விநியோகம் இந்தப் பாதை வழியாகவே செல்வது குறிப்பிடத்தக்கது.
ஈரானின் எரிசக்தி நிலையங்கள் அல்லது சொத்துகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் எச்சரித்துள்ளார். அமெரிக்காவின் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்திச் சங்கிலியும் வெளிப்படையான ஆபத்தில் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், தங்களுடைய சொத்துகள் தாக்கபட்டால் அமெரிக்க நிறுவனங்களும் பதிலடித் தாக்குதல்களை எதிர்கொள்ளும் என்றார்.
ஈரானின் எண்ணெய் டேங்கர் கப்பற்படை பாதுகாப்பற்றது என்றும், அவைகளுக்கு கடற்படையோ விமானப்படையோ இல்லை என்றும் அமெரிக்கப் போர்த் துறை செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார். அமெரிக்கக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால் அந்த டேங்கர் கப்பல்கள் முழுமையாக அழிக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
கடந்த வாரம் அமெரிக்கக் போர்க்கப்பல்கள் பாலிஸ்டிக் ஏவுகணைகளால் குறிவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்கப் படைகள் மூன்று ஈரானிய எண்ணெய் டேங்கர்களைத் தாக்கின. அமெரிக்க விமானந்தாங்கி கப்பல் மற்றும் வழிகாட்டப்பட்ட ஏவுகணைக் கப்பல் இந்தத் தாக்குதல்களை வெற்றிகரமாகத் தடுத்ததோடு, கார்க் தீவு மற்றும் ஓமன் வளைகுடாப் பகுதிகளில் ஈரானியக் கச்சா எண்ணெய் கப்பல்களை நிரந்தரமாகச் செயலிலக்கச் செய்தோ அல்லது முழுமையாக அழித்தோ உள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைகம் தெரிவித்துள்ளது.



