பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்கள், வங்கி வட்டி விகிதங்களில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற காரணங்களால் பாதுகாப்பான முதலீட்டு திட்டங்களை நாடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஓய்வுபெற்றவர்கள், குடும்பச் செலவுகளுக்காக நிலையான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்ப்பவர்கள் மற்றும் ஆபத்து இல்லாத முதலீட்டை விரும்புபவர்கள் மத்தியில் அரசின் சேமிப்பு திட்டங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அந்த வகையில், தபால் அலுவலகத்தின் மாதாந்திர வருமானத் திட்டம் தற்போது மீண்டும் கவனம் ஈர்த்து வருகிறது.
அஞ்சல் அலுவலகம் மூலம் செயல்படுத்தப்படும் இந்த மாதாந்திர வருமானத் திட்டம், ஒருமுறை முதலீடு செய்தாலே அடுத்த 5 ஆண்டுகள் வரை ஒவ்வொரு மாதமும் நிலையான வட்டித் தொகையை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவாதம் கொண்ட இந்தத் திட்டம் பாதுகாப்பான வருமானத்தை நாடுபவர்களுக்கு சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால், முதலீட்டாளர் ஒருமுறை மட்டும் தொகையை டெபாசிட் செய்தால் போதும். அதன் பின்னர் மாதந்தோறும் வட்டி வருமானம் நேரடியாக சேமிப்புக் கணக்கில் வரவு வைக்கப்படும். சந்தை நிலவரம் எப்படி மாறினாலும், கணக்கு தொடங்கிய நேரத்தில் நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதமே முழு காலத்திற்கும் தொடரும்.
தற்போது இந்தத் திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.4 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டி விகிதம் 5 ஆண்டுகள் முழுவதும் நிலையாக இருக்கும். தனிநபர் கணக்காக தொடங்கினால் அதிகபட்சமாக ரூ.9 லட்சம் வரை முதலீடு செய்யலாம். அதேசமயம் கூட்டுக் கணக்காக தொடங்கினால் ரூ.15 லட்சம் வரை டெபாசிட் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.
கணவன்-மனைவி இணைந்து ரூ.15 லட்சம் முதலீடு செய்தால், ஆண்டுக்கு ரூ.1,11,000 வரை வட்டி கிடைக்கும். இதை மாதந்தோறும் கணக்கிட்டால் சுமார் ரூ.9,250 வருமானமாக கிடைக்கும். இந்தத் தொகை ஒவ்வொரு மாதமும் நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்பதால், ஓய்வுபெற்றவர்களுக்கு இது ஒரு மாத சம்பளத்தைப் போல உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் கால அவகாசம் 5 ஆண்டுகள். இந்த காலம் முழுவதும் மாதாந்திர வட்டி பெற முடியும். 5 ஆண்டுகள் முடிந்தவுடன் முதலீடு செய்த அசல் தொகை முழுமையாக திருப்பித் தரப்படும். முதலீட்டாளர் விரும்பினால், அதே தொகையை மீண்டும் புதிதாக 5 ஆண்டுகளுக்கு reinvest செய்யவும் வாய்ப்பு உள்ளது.
அதேநேரத்தில், அவசரத் தேவைக்காக திட்டத்தை முன்கூட்டியே முடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும் சில விதிமுறைகள் உள்ளன. கணக்கு தொடங்கிய முதல் ஒரு ஆண்டுக்குள் பணத்தை திரும்ப பெற முடியாது. 1 முதல் 3 ஆண்டுகளுக்குள் பணத்தை எடுத்தால் அசல் தொகையில் 2 சதவீதம் அபராதமாகக் கழிக்கப்படும். 3 முதல் 5 ஆண்டுகளுக்குள் எடுத்தால் 1 சதவீதம் கழிக்கப்படும். பாதுகாப்பான முதலீடு, நிலையான மாதாந்திர வருமானம் மற்றும் அரசின் உத்தரவாதம் ஆகிய மூன்றையும் ஒரே நேரத்தில் வழங்கும் இந்த தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் தற்போது நடுத்தர வர்க்க மக்களிடையே அதிக கவனம் பெற்று வருகிறது.
Read more: எபோலா வைரஸ் எதிரொலி.. இந்தியா வரும் பயணிகளுக்கு டெல்லி விமான நிலையம் அவசர அலர்ட்..!



