அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) மற்றும் முன்னுரிமை குடும்ப அட்டைகள் (PHH) என்ற வகை ரேஷன் கார்டுகளைப் பெற்றிருக்கும் பயனாளிகள் தங்களது கைவிரல் ரேகையை (Biometric Authentication) கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான காலக்கெடு ஜூலை 25, 2025 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பில் செயல்பட்டு வரும் AAY திட்டத்தின் கீழ் இலவச அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் நிலையில், சரியான பயனாளிகளை அடையாளம் காண்பது, போலி கார்டுதாரிகளை நீக்குவது, இறந்தவர்களின் பெயர்களை அகற்றுவது போன்ற காரணங்களுக்காக இப்பதிவு அவசியமாக்கப்பட்டுள்ளது.
இதுவரை விரல்ரேகை பதிவு செய்யாத பயனாளிகள், தாங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலுள்ள நியாயவிலைக் கடைக்கு நேரில் சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. வெளியூரில் இருப்பவர்களும், எந்த ஒரு நியாயவிலைக் கடையிலும் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுத் தரப்பில் தெரிவிக்கப்படுவதற்கேற்ப, பதிவு செய்யாத ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படும் என்பதும் உறுதியான எச்சரிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசுக்கு இவ்வகை பயனாளிகள் பற்றிய முழுமையான விவரங்கள் இல்லாததால், மாநிலங்களுக்கு அதிக அளவில் ரேஷன் பொருட்கள் அனுப்பப்படுகிறது. இதனால், பலரும் ரேஷன் பெற்று பயன்படுத்தாமல் இருப்பதும், முறைகேடுகள் ஏற்படுவதும் கவலையளிக்கிறது. இதனைத் தடுக்கும் முயற்சியாகவே இந்த Bio-metric பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
எனவே, AAY மற்றும் PHH ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள், தாமதிக்காமல் உடனடியாக கைவிரல் ரேகை பதிவு செய்து கொள்ளுமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இல்லையெனில், உங்கள் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் அபாயம் இருப்பதாக மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
Read more: அதிமுக முன்னாள் MLA அறிவழகன் காலமானார்.. அரசியல் கட்சியினர் இரங்கல்..!!