கேரளாவில் வருகிற ஏப்ரல் 9-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை எட்ட வேண்டும் என்ற இலக்குடன், இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் மாநிலத் தேர்தல் அதிகாரிகள் இணைந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக, முதல்முறை வாக்களிக்கும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களை ஊக்குவிக்கும் வகையில் பல கவர்ச்சிகரமான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாக்காளர்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், சிறப்பு பிரச்சாரங்கள் மற்றும் வாக்காளர்களுக்கான ஊக்கத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த முயற்சிகள் மூலம், இம்முறை கேரளாவில் வாக்குப்பதிவு சதவீதம் குறிப்பிடத்தக்க அளவில் உயரும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
முதன்முறையாக வாக்களிக்கும் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு வீட்டிலிருந்து வாக்குச்சாவடிக்கு சென்று வர இலவச கார் மற்றும் ஆட்டோ வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு ‘கூப்பன்’களும் வழங்கப்படுகின்றன. மேலும், வாக்களித்துவிட்டு விரலில் மை வைத்திருக்கும் வாக்காளர்களுக்கு, கேரளாவின் பிரபலமான அல்வா இனிப்பு பரிசாக வழங்கப்படுகிறது. சில மாவட்டங்களில் குடும்பத் தலைவிகளை ஊக்குவிக்க ரூ.1க்கு ஒரு கிலோ அரிசி மாவு வழங்கும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், பிரபல காபி நிறுவனங்களுடன் இணைந்து, வாக்காளர்களுக்கு தள்ளுபடி விலையில் காபி மற்றும் சிற்றுண்டிகள் வழங்கப்படுகின்றன. வாக்குச்சாவடிகளில் உள்ள கூட்ட நெரிசலை அறிந்து கொள்ள பிரத்யேக மொபைல் செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. “வாக்களிப்பது உங்கள் உரிமை மட்டுமல்ல, அது ஒரு கொண்டாட்டம்” என்ற முழக்கத்துடன் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த தேர்தல்களை விட இம்முறை வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க கேரளா தீவிரமாக செயல்பட்டு வருகிறது.



