தற்கொலை செய்யப்போவதாக 21 வயது பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் நேரடி வீடியோவை வெளியிட்ட 19 நிமிடங்களுக்குள், போலீசார் அவரது உயிரைக் காப்பாற்றினர்.
உத்தரபிரதேச மாநிலம் காஜிப்பூரில் 21 வயது இளம் பெண் ஒருவர் “நான் விஷம் குடிக்க போகிறேன்” என்று தலைப்பிட்டு இன்ஸ்டாகிராமில் லைவ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மெட்டாவின் பாதுகாப்பு அமைப்பு இந்தப் பதிவை தற்கொலை அபாயமாகக் குறிப்பிட்டு, உடனடியாக லக்னோவில் உள்ள உ.பி. காவல் தலைமையகத்தில் உள்ள சமூக ஊடக மையத்திற்கு எச்சரிக்கையை மின்னஞ்சல் செய்தது.
இந்த எச்சரிக்கையைப் பெற்ற மூத்த காவல்துறை அதிகாரி ராஜீவ் கிருஷ்ணா, அந்த இடத்தைக் கண்டுபிடித்து காஜிப்பூர் காவல்துறைக்கு தகவல் அளித்தது. உள்ளூர் காவல்துறையினர், ஒரு பெண் கான்ஸ்டபிளுடன் சேர்ந்து, 19 நிமிடங்களில் அந்தப் பெண்ணின் வீட்டை அடைந்தனர். உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்த அவரது அறையை உடைத்து உள்ளே சென்ற போலீசார், அந்தப் பெண் படுக்கையில் மயக்கமடைந்திருப்பதைக் கண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் அவசர சிகிச்சை அளித்து, அவரது உயிரை காப்பாற்றினர்.
அந்தப் பெண்ணை விசாரித்தபோது, அவர் டெல்லியின் நீர் வழங்கல் துறையில் பணிபுரிந்து வந்ததாகவும், அங்கு அவர் பிரயாக்ராஜைச் சேர்ந்த ஒருவரை சந்தித்து காதலித்ததாக கூறினார். திருமணம் செய்து கொள்வதாக நம்பிக்கை அளித்த பின்னர் அந்த பெண்ணுடனான தொடர்பை துண்டித்துவிட்டார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பெண் தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.
விரைந்து செயல்பட்ட காவல்துறைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். கடந்த 2022 முதல், தற்கொலை தொடர்பான பதிவுகளுக்காக பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமைக் கண்காணிக்க மெட்டா மற்றும் உ.பி. காவல்துறை இடையே ஒரு ஏற்பாடு நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Read more: காதலனை அடித்தே கொன்ற காதலி.. நீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு..!! பகீர் பின்னணி..



