தெலுங்கானா மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத் – ஹிமாயத் நகரில் இடம்பெற்ற தற்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தொழிலதிபர் அருண்குமார் ஜெயின் என்பவரின் மனைவி பூஜா (வயது 43), மூடநம்பிக்கையின் பேரில் ஐந்தாவது மாடியிலிருந்து கீழே குதித்து உயிரிழந்துள்ளார்.
அருண்குமார் ஜெயின், தனது மனைவி பூஜா மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் ஹிமாயத் நகரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். சம்பவத்தன்று காலை அவர் தனது அலுவலகத்திற்கு சென்றுவிட்டார். அந்த நேரத்தில் பூஜா வீட்டில் பிள்ளைகள் மற்றும் ஒரு வேலைக்காரப் பெண்ணுடன் இருந்தார். பூஜா நீண்ட நேரம் ஒரு அறையில் தனிமையாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
மதியம் 2 மணியளவில் அறையிலிருந்து வெளியே வந்து “நான் கடவுளிடம் செல்கிறேன்” எனக் கூறிவிட்டு, நேராக 5வது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்ட போது, அவருடைய அறையில் ஒரு கடிதம் சிக்கியது.
அந்தக் கடிதத்தில், நாம் தொடர்ந்து கடவுளை பற்றி தியானித்து அவருக்கு நம்மை அர்ப்பணித்தால், நம்மை அவரிடம் நெருக்கமாக்கிக் கொண்டு சொர்க்கத்தை அடைய முடியும் என சமண குருக்களின் கோட்பாட்டை மேற்கோளாக எழுதியிருந்தது. இதனைக் கொண்டு போலீசார் மூடநம்பிக்கையில் இருந்து தோன்றிய உணர்ச்சி வெடிப்பே இவரது தற்கொலையின் காரணம் எனக் கருதுகின்றனர். இந்தச் சம்பவம், கல்வி, செல்வம், நகர வாழ்க்கை என்று எல்லாவற்றையும் கடந்து, மூடநம்பிக்கைகள் இன்னும் எப்படி மனிதர்களின் வாழ்க்கையை புரட்டிப் போடுகின்றன என்பதை காட்டும் கசப்பான உதாரணம் எனக் கூறலாம்.
Read more: மீண்டும் சுனாமி அலர்ட்.. 7.0 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. பீதியில் உறைந்த மக்கள்..!!