மத்தியப் பிரதேசத்தின் கார்கோன் மாவட்டத்தில், வரதட்சணை கொண்டு வராத மனைவியை கணவர் கொடூரமாக சித்ரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகவலின்படி 23 வயதான குஷ்பூ பிப்லியாவுக்கு இந்த ஆண்டு பிப்ரவரியில் திருமணம் நடைபெற்றது. திருமண நாளிலிருந்தே வரதட்சணை கேட்டு கணவன் தொடர்ந்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, குடிபோதையில் வந்த கணவன் பெண்ணை கொடூரமாக தாக்கியுள்ளார். பின்னர் சமையலறைக்கு இழுத்துச் சென்று கால்கள் மற்றும் கைகளைக் கட்டி போட்டுள்ளார்.
இரும்பு கம்பியை அடுப்பில் வைத்து சூடுபடுத்தி மார்பு, கைகள் மற்றும் கால்களில் கடுமையாக சூடு வைத்துள்ளார். வலியால் அலறிய போது, கத்தியை குஷ்புவின் வாயிலும் வைத்துள்ளார். இந்த சம்பவம் நடந்த போது கணவனின் தாய் தந்தை அருகில் இருந்ததாகவும், அவர்களும் இதற்கு உடந்தை என பாதிக்கப்பட்ட பெண் குற்றம்சாட்டினார். மேலும் “எனது பெற்றோர் உன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினர், எனக்கு உன்னை பிடிக்கவில்லை” என கணவர் கூறியதை தனது புகாரில் பகிர்ந்துள்ளார்.
திங்கட்கிழமை அதிகாலை வீட்டில் எல்லாரும் உறங்கியபோது 4:30 மணியளவில் வீட்டிலிருந்து தப்பி, வீட்டு வேலைக்காரரின் செல்போன் மூலம் தனது பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். பெற்றோர் அவளை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன் பின்னர் குஷ்புவின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் மருத்துவமனைக்கு சென்று குஷ்புவிடம் வாக்குமூலம் பதிவு செய்தனர்.
இதை தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக உத்தரப் பிரதேசத்தில், வரதட்சணை கொண்டுவராத மனைவியை கணவர் தீவைத்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சமீபத்திய சம்பவம், வரதட்சணை தொடர்பான குடும்ப வன்முறைகள் மீண்டும் சமூக கவனத்தை ஈர்க்கும் வகையில் உள்ளது.
Read more: தவெக தொண்டர் குண்டுகட்டாக தூக்கிவீசப்பட்ட விவகாரம்.. விஜய் பவுன்சர்கள் மீது காவல்துறையில் புகார்..