தமிழகத்தில் தற்போது டிஜிட்டல் மின் மீட்டர்கள் மூலம் மின்சார பயன்பாடு கணக்கிடப்படுகிறது. இவற்றை ஸ்மார்ட் மீட்டராக மாற்ற ரூ.19,235 கோடியில், 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் கொள்முதல் செய்யப்படுவதற்கான டெண்டர் கடந்த மார்ச் மாதம் கோரப்பட்டது. இந்த டெண்டர் ஜூலை 31-ம் தேதி திறக்கப்பட இருப்பதாக மின் வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை சுமார் 3 கோடி மின்நுகர்வோர்கள் உள்ளனர். இவர்களின் மின்சார பயன்பாட்டை மேம்படுத்தும் நடவடிக்கையாக ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்த தமிழக அரசும் முடிவு செய்துள்ளது. இதையடுத்து, ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்வதற்காக தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் சார்பில் 4 கட்டங்களாக ஒப்பந்தப்புள்ளிகள் (டெண்டர்) வெளியிடப்பட்டன. இதில், அதானி நிறுவனம் பங்கேற்று குறைந்த கட்டணமே குறிப்பிட்டிருந்தது. ஆனால், அந்த கட்டணம் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பட்ஜெட்டை காட்டிலும் அதிகமாக இருந்ததால், அந்த டெண்டர் கடந்த டிசம்பரில் ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து, இந்தாண்டு மீண்டும் மார்ச் 14ம் தேதி மின் இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த ரூ.19,235 கோடி செலவில், 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் கொள்முதல் செய்யப்படுவதற்கான டெண்டர் கோரப்பட்டது. குறிப்பாக, சென்னை, வேலூர் மண்டலத்தில் 49.43 லட்சம், கோவை, ஈரோடு மண்டலத்தில் 56.74 லட்சம், கரூர், நெல்லை மண்டலங்களில் 49.98 லட்சம், திருச்சி, தஞ்சாவூர் மண்டலங்களில் 49.77 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள் என 6 கட்டமாக பொருத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டு வரும் ஸ்மார்ட் மீட்டருக்கான டெண்டர் ஜூலை 31-ம் தேதி திறக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.