கனமழை காரணமாக திருப்பத்தூரில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார்.
தெற்கு கடலோர ஆந்திர பிரதேசத்தில் இருந்து, கடலோர தமிழகம் வழியாக வடக்கு இலங்கை வரை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வட தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு மற்றும் சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேற்று இரவு முதல் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று திருவண்ணாமலை கிரிவலம் சென்ற லட்சக்கணக்கான பக்தர்கள் கனமழையால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, திருப்பத்தூரில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே அரசுப் பள்ளிகள் விடுமுறையில் இருந்த நிலையில், தற்போது தனியார் பள்ளிகளுக்கும் இந்த விடுமுறை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.