இந்தியாவிடம் 25 நாட்களுக்கு தான் கச்சா எண்ணெய் இருக்கு.. பெட்ரோல், டீசல் விலை உயருமா..? மத்திய அரசு முக்கிய தகவல்..!

crude oil 2026

மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் சூழ்நிலையில், இந்தியாவிடம் தற்போது 25 நாட்களுக்கு போதுமான கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் கையிருப்பு இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உலகளாவிய எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்திருந்தாலும், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை உடனடியாக உயர்த்தும் திட்டம் இல்லை என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..


பிரென்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 80 அமெரிக்க டாலர் என்ற நிலைக்கு சென்றுள்ளது. ஈரான் நெருக்கடியின் பின்னர் இது சுமார் 10 சதவீதம் உயர்வு ஆகும். மேலும், உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் நீரிணை ஈரானால் மூடப்பட்டதால், எண்ணெய் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவிற்கு இது இறக்குமதி செலவை அதிகரிக்கும் நிலையை உருவாக்குகிறது.

இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி நிலை

இந்தியா தேவையான கச்சா எண்ணெயில் சுமார் 88 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களுக்கு தேவையான இந்த கச்சா எண்ணெயில், 50 சதவீதத்திற்கும் மேல் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வருகிறது. அந்த எண்ணெய் பெரும்பாலும் ஹார்முஸ் நீரிணை வழியாகவே இந்தியாவிற்கு கொண்டு வரப்படுகிறது. தற்போது ஈரான் நெருக்கடியால் அந்தப் பாதையில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.

ஈரான் மீது இராணுவ தாக்குதல்

கடந்த வார இறுதியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானில் பல இலக்குகளை குறிவைத்து இராணுவ தாக்குதல்களை நடத்தியன. இதற்கு பதிலடியாக, ஈரான் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகள் உள்ள நாடுகள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது. இதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், குவைத், பஹ்ரைன், ஈராக், ஜோர்டான் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த மோதலால் ஹார்முஸ் நீரிணை நடைமுறையில் மூடப்பட்டதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கடல் வழியாக கொண்டு செல்லப்படும் கச்சா எண்ணெயில் மூன்றில் ஒரு பங்கு, மேலும் திரவ இயற்கை எரிவாயுவின் (LNG) 20 சதவீதம் இந்தச் சுருங்கிய கடல்வழி வழியாகவே செல்கிறது.

உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் இறக்குமதியாளர் இந்தியா

உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் இறக்குமதி நாடான இந்தியா, தன் கச்சா எண்ணெய் தேவையின் சுமார் பாதியை ஹார்முஸ் நீரிணை வழியாக பெறுகிறது. இந்தியாவின் முக்கிய LNG எரிவாயு வழங்குநரான கத்தாரும், இதே வழியில்தான் இந்தியாவிற்கு எரிவாயுவை அனுப்புகிறது.

இந்த நீரிணை முழுமையாக மூடப்பட்டால், மத்திய கிழக்கிலிருந்து வரும் எண்ணெய் குறைவைக் ஈடு செய்ய மேற்கு ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் அமெரிக்கா போன்ற பகுதிகளிலிருந்து இந்தியா எண்ணெய் வாங்க முடியும். அதேபோல், ரஷ்யாவிலிருந்தும் கூடுதல் எண்ணெய் வாங்கி பற்றாக்குறையை சமாளிக்க வாய்ப்பு உள்ளது.

இந்தியாவின் எரிபொருள் ஏற்றுமதி

2024–25 நிதியாண்டில், இந்தியா 2.37 கோடி டன் (ஒரு நாளுக்கு 4.74 லட்சம் பீப்பாய்) பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. இது நாட்டின் மொத்த எரிபொருள் பயன்பாட்டின் சுமார் 10 சதவீதம் ஆகும். ஏப்ரல் முதல் ஜனவரி வரை, இந்தியாவின் பெட்ரோலியப் பொருட்கள் ஏற்றுமதி 5.33 கோடி டன் ஆக பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

Read More : விடாமல் அடிக்கும் இஸ்ரேல்.. ஈரானின் புதிய பாதுகாப்பு அமைச்சரும் கொலை.. பதவியேற்ற 2 நாட்களில் அதிர்ச்சி..!

RUPA

Next Post

முடிவுக்கு வரும் இழுபறி..! இத்தனை சீட் தான்..! ஸ்டாலின் கறார்..! இன்று முடிவை அறிவிக்கிறது காங்கிரஸ்..!

Wed Mar 4 , 2026
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் சூடுபிடித்துள்ளது.. ஆளுங்கட்சியான திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.. திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தாலும் காங்கிரஸ் கட்சி மட்டும் எந்த தேர்தலிலும் இல்லாத வகையில் இந்த முறை அதிக குடைச்சல் கொடுத்து வருகிறது. முதலில் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கோஷம் எழுப்பியது.. ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது தமிழகத்திற்கு ஒத்துவராது […]
stalin p chidambaram

You May Like