தென்காசி பகவதிபுரத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (25). கேரள மாநிலம் புனலூரைச் சேர்ந்தவர் கலாசூர்யா (25). இருவரும் மதுரை மாவட்டம் சொரிக்காம்பட்டியில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் வேலை பார்த்து வந்தனர். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. 2 மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணமும் செய்து கொண்டனர்.
இந்த திருமணத்திற்கு முன்பே கலாசூர்யாவுக்கு 2 முறை திருமணங்கள் முடிந்திருந்தன. கணவனை விட்டு பிரிந்த நிலையில் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கு ஷிவானி என்ற 2 வயது பெண் குழந்தையும் உள்ளது. இந்த விஷயம் 3 வது கணவன் கண்ணனுக்கும் தெரியும். இருப்பினும் திருமணத்திற்கு பிறகு குழந்தை இடையூறாக இருப்பதாக கூறி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் 5-ந் தேதி, கலாசூர்யா வீட்டில் இல்லாத நேரம் கண்ணன், 2 வயது குழந்தையான ஷிவானியின் கழுத்தை நெரித்தே கொன்றுள்ளார்.. கலாசூர்யா வீடு திரும்பியதும், குழந்தையின் சடலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
ஆனாலும் 3வது கணவனை காப்பாற்ற, குழந்தையின் உடலை ஒரு மூட்டையில் கட்டி, பண்ணைக்கு அருகிலுள்ள காட்டுப்பகுதியிலுள்ள புதரில் வீசிவிட்டு வந்துள்ளனர். இதன் பிறகு இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் கோபித்துக் கொண்டு கேரளாவில் உள்ள தன்னுடைய அம்மா வீட்டிற்கு கிளம்பி சென்றுவிட்டார். அங்கே போனதுமே, “குழந்தை எங்கே?” என்று அவரின் அம்மா கேட்டுள்ளார். இதற்கு கலாசூர்யா தெளிவான பதில் சொல்லவில்லையாம்.. இதனால் சந்தேகம் அதிகரித்த அவர், உடனே புனலூர் போலீசில் புகார் தந்துள்ளார்..
இதையடுத்து கேரள போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினார்கள்.. . விசாரணையில், குழந்தையை கொன்று புதரில் வீசியதை கண்ணன் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, கண்ணன் மற்றும் கலாசூர்யா இருவரையும் போலீசார் கைது செய்தனர். குழந்தையை கொன்று 1 மாதம் ஆகிவிட்டதால், போலீசார் காட்டுப்பகுதிக்கு சென்று தேடியபோது, குழந்தையின் உடல் முழுவதும் அழுகி, எலும்புகள் மட்டுமே மீட்கப்பட்டன. பெற்ற தாயே குழந்தையை கொலை செய்ய உடந்தையாக இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read more: கோயில் நகரம் தொழில் நகரமாக மாறணும்.. மதுரையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு..!



