மத்திய அரசின் அஞ்சல் துறையின், அஞ்சலக ஆயுள் காப்பீடு/ கிராமிய அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டங்களில் முகவர்களாக செயல்பட விருப்பம் உள்ளவர்களுக்கு நேர்காணல் சென்னையில் உள்ள பொது அஞ்சலகத்தில் நவம்பர் 17-ம் தேதி காலை 11.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
அஞ்சலக முகவர்களாக சேர விருப்பம் உள்ளவர்கள் தங்களுடைய வயது, கல்வித்தகுதி, முன் அனுபவம் ஆகியவற்றுக்கான சான்றிதழ்கள் (அசல் மற்றும் சுய சான்றொப்பமிட்ட நகல்), ஆதார் அட்டை, பான் அட்டை மற்றும் அண்மையில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவிலான இரண்டு புகைப்படங்களுடன் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் நேர்காணலுக்கு நேரில் வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நேர்காணலுக்கு வரும் விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 ஆக இருக்க வேண்டும். அதிக வயது வரம்பு எதுவும் இல்லை. விண்ணப்பதாரர் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இதர ஆயுள் காப்பீட்டின் முன்னாள் முகவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சுயஉதவிக் குழுவினர், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், வேலைவாய்ப்பு தேடுபவர்கள் அல்லது சுயவேலைவாய்ப்பில் இருக்கும் இளைஞர்கள் இதில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுள் காப்பீடு சேகரிப்பதில் முன் அனுபவமும், உள்ளூர் பகுதிகளை முழுமையாக அறிந்து வைத்திருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் முகவர்களாக செயல்பட பாதுகாப்பு முன் வைப்புத் தொகையாக 5000 ரூபாயும், திரும்ப வழங்கப்படாத உரிமை கட்டணமாக 250 ரூபாயும் செலுத்த வேண்டும். இந்த நேர்காணலில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தற்காலிக முகவர் உரிமம் வழங்கப்படும். இது அரசு பணி அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முகவர்களாக செயல்படுபவர்களுக்கு அவர்கள் சேர்க்கும் பாலிசிகளுக்கு ஏற்ப ஊக்கத்தொகை வழங்கப்படும் என அஞ்சல்துறை தெரிவித்துள்ளது.



