ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானில் சிக்கிய இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற இந்தியாவின் கோரிக்கைக்கு ஈரான் அரசாங்கம் திங்களன்று ஒத்துழைப்பு தெரிவித்துள்ளது. தற்போது ஈரானில் உள்ள சுமார் 10,000 இந்தியர்களில் பெரும்பாலோர் மருத்துவம் மற்றும் மதத்துடன் தொடர்புடைய கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் ஆகும்.
தற்போதைய மோதலால் ஈரானிய வான்வெளி மூடப்பட்டுள்ளதாலும், இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற நில எல்லைகள் அஜர்பைஜான், துர்க்மெனிஸ்தான், ஆப்கானிஸ்தான் வழியாக பயன்படுத்த முடியும் என தெஹ்ரான் அறிவித்துள்ளது. இந்திய தூதரகம் வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து மாணவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றது.
மேலும், மாணவர்கள் மற்றும் இந்தியர்கள் அதிகாரப்பூர்வ தகவல் சேனல்களையே நாட வேண்டுமெனவும், கீழ்க்கண்ட டெலிகிராம் குழுவில் இணையுமாறு அறிவுறுத்தியுள்ளது. மாணவர்கள் தொடர்ந்து குண்டுவெடிப்பு சத்தங்களில் பீதியடைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். சிலர் மூன்று நாட்களாக தூங்க முடியவில்லை எனவும், பல்கலைக்கழகங்கள் வகுப்புகளை நிறுத்தி வைத்துள்ளன எனவும் கூறுகின்றனர்.
ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்கள், “நாங்கள் அடுக்குமாடி குடியிருப்பின் அடித்தளத்தில் ஒளிந்து இருக்கிறோம்; மிகவும் பயமுறுத்துகிறது” என்று தெரிவித்துள்ளனர். “நிலைமை மோசமடைவதற்கும் முன் எங்களை வெளியேற்றுங்கள்” என அவர்கள் வலியுறுத்துகிறார்கள். இந்திய தூதரகம் ஹெல்ப்லைன் எண்களை பகிர்ந்துள்ளது. மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
Read more: பாமகவிற்கு துரோகம் செய்தால் அதுதான் என் வாழ்நாளின் கடைசி நாளாக இருக்கும்.. அன்புமணி உருக்கம்..