“ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடக்க முயன்ற இரண்டு கப்பல்கள், ‘வழிசெலுத்தல் அமைப்புகளைக் கையாண்டு, ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதற்காக’ ஈரானின் ஐ.ஆர்.ஜி.சி-(IRGC) யால் கைப்பற்றப்பட்டு, ஈரானுக்குக் கொண்டு செல்லப்படுவதாக அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
“தேவையான அனுமதிகள் இல்லாமல் இயங்கியும், வழிசெலுத்தல் அமைப்புகளைக் கையாண்டும் கடல்சார் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய, விதிமீறலில் ஈடுபட்ட இரண்டு கப்பல்களான ‘எம்.எஸ்.சி-ஃபிரான்செஸ்கா’ (சியோனிச ஆட்சியுடன் தொடர்புடையது) மற்றும் ‘எபாமினோடெஸ்’ ஆகியவை ஐ.ஆர்.ஜி.சி கடற்படையால் கைப்பற்றப்பட்டு ஈரானின் கடற்கரைக்கு அனுப்பப்பட்டன,” என்று ஐ.ஆர்.ஜி.சி கடற்படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“ஹோர்முஸ் ஜலசந்தியில் ஒழுங்கையும் பாதுகாப்பையும் சீர்குலைப்பது எங்களின் சிவப்பு கோடு.”
அந்தக் கப்பல்கள் எம்.எஸ்.சி-ஃபிரான்செஸ்கா மற்றும் எபாமினோடெஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளன. மரைன்ட்ராஃபிக் வலைத்தளத்தின்படி, லைபீரியாவின் கொடியின் கீழ் பயணிக்கும் ஒரு கொள்கலன் கப்பலான எபாமினோடெஸ், துபாயில் உள்ள ஜெபல் அலியிலிருந்து குஜராத்திற்குச் சென்று கொண்டிருந்தது.
ஈரானால் மூன்று கப்பல்கள் தாக்கப்பட்டன
இன்று முன்னதாக, ஹோர்முஸ் நீரிணையில் குறைந்தது மூன்று கொள்கலன் கப்பல்கள் ஈரானால் தாக்கப்பட்டன. முதல் தாக்குதலை உறுதிப்படுத்திய ஐக்கிய இராச்சியத்தின் கடல்சார் வர்த்தக செயல்பாட்டு மையம் (UKMTO), ஓமானுக்கு வடகிழக்கே சுமார் 15 கடல் மைல் தொலைவில் ஒரு கொள்கலன் கப்பல் மீது ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் (IRGC) துப்பாக்கிப் படகு ஒன்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறியது.
இரண்டாவது சம்பவத்தில், ஐக்கிய அரபு அமீரகத்தை தளமாகக் கொண்ட ஒரு நிறுவனத்திற்குச் சொந்தமான, பனாமா கொடியை ஏந்திய ‘யூஃபோரியா’ என்ற கப்பல், ஈரானுக்கு மேற்கே சுமார் எட்டு கடல் மைல் தொலைவில் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கப்பல் பணியாளர்கள் காயமின்றி இருந்ததாகவும், கப்பலுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும் UKMTO கூறியது.
பனாமா கொடியை ஏந்திய ‘MSC ஃபிரான்செஸ்கா’ கப்பலும், ஹோர்முஸ் ஜலசந்தியிலிருந்து தெற்கே ஓமான் வளைகுடாவிற்குள் பயணித்துக் கொண்டிருந்தபோது, ஈரானின் கடற்கரையிலிருந்து சுமார் ஆறு கடல் மைல் தொலைவில் குறிவைக்கப்பட்டது. வான்கார்ட் என்ற கடல்சார் புலனாய்வு நிறுவனத்தின்படி, கப்பலின் உள்கட்டமைப்பு மற்றும் தங்குமிடப் பகுதிகளில் சேதம் ஏற்பட்டதாக அக்கப்பல் தெரிவித்துள்ளது.
போர் நிறுத்தத்தை நீட்டித்த டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், போர் நிறுத்தம் காலாவதியாகும் சில மணி நேரங்களுக்கு முன்பு, புதன்கிழமை அதை நீட்டித்தார். மேலும், மோதலை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவர ஈரான் ஒரு “ஒருங்கிணைந்த முன்மொழிவை” சமர்ப்பிக்கும் வரை இந்த போர் நிறுத்தம் தொடரும் என்றும் அவர் கூறினார்.



