நடிகர் தனுஷ், தனது ரசிகர் நற்பணி மன்றங்களை சட்டமன்றத் தொகுதி வாரியாக விரிவுபடுத்தும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருவது, அவர் விரைவில் அரசியலில் களமிறங்க ஆயத்தமாகிறாரா என்ற விவாதத்தை திரையுலகிலும், அரசியல் வட்டாரத்திலும் கிளப்பியுள்ளது.
தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஓம்’ திரைப்படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இப்படத்தில் சாய் பல்லவி, ஸ்ரீலீலா, மம்மூட்டி உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்கள் நடிப்பதுடன், சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதனைத் தொடர்ந்து, ‘லப்பர் பந்து’ புகழ் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து, வெற்றிமாறனின் ‘தமிழ் முருகன்’ மற்றும் மாரி செல்வராஜ் இயக்கத்திலான படங்கள் என அடுத்தடுத்து முன்னணி இயக்குநர்களின் படைப்புகளில் நடிக்க அவர் ஒப்பந்தமாகியுள்ளார்.
ஒருபுறம் கலைப் பயணத்தில் பிஸியாக இருந்தாலும், மறுபுறம் தனது அகில இந்தியத் தலைமை ரசிகர் நற்பணி மன்றத்தை வலுப்படுத்தும் பணிகளிலும் அவர் கவனம் செலுத்தி வருகிறார். அண்மையில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் பேசிய அவர், “சும்மா வந்து என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு செல்வதோடு நின்றுவிடக் கூடாது; உங்களைச் சுற்றியுள்ள மக்களுக்குத் தேவையான உதவிகளையும் நலத்திட்டங்களையும் தொடர்ந்து செய்யுங்கள்” எனத் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார்.
இதன் தொடர்ச்சியாக, தனுஷ் நற்பணி இயக்கம் சார்பில் தற்போது அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில், கோவை மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் நற்பணி இயக்கத்தின் கிளைகளைத் தொடங்கவும், புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் பணிகளை முடுக்கிவிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சட்டமன்றத் தொகுதி வாரியாக அமைப்புகளை வலுப்படுத்தி உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்கும் தனுஷின் இந்த நகர்வு, அவர் அரசியல் களம் காண்பதற்கான முதற்கட்ட ஆயத்தப்பணியோ என்ற கேள்வியை வலுக்க செய்துள்ளது.
Read More : ரேஷன் கடைகள் செயல்படும் நேரம் மாற்றமா..? அதிகாரிகளுக்கு பறந்த ஆர்டர்..!! கூட்டுறவுத்துறை அதிரடி..!!



