இன்று பள்ளிகள் வழக்கம் போல செயல்படும் என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. மேலும், சென்னை, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசியில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. விழுப்புரம், கடலூரில் சில இடங்களில் கனமழை பெய்து வருவதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், பள்ளிகள் வழக்கம் போல செயல்படும் என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
புயல் எச்சரிக்கை
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதிஉருவாகியுள்ளது. இது மேற்கு,வடமேற்கு திசையில் மெதுவாகநகர்ந்து, இன்று தென்கிழக்கு, மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 27-ம் தேதி காலை தென்மேற்கு, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாகவும் வலுவடையக்கூடும். புதிய புயலுக்கு ‘மோன்தா’ (Montha) என பெயரிடப்பட உள்ளது. இந்த பெயரை தாய்லாந்து நாடு பரிந்துரை செய்துள்ளது. இதற்குப் பொருள் ‘அழகு மலர்’ ஆகும்.
அரபிக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று வடக்கு, வட கிழக்கு திசையில் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளை கடந்து செல்லக்கூடும். இன்று கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும், நாளை விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யக்கூடும். 27-ம் தேதி திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். 28-ம் தேதி திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.



