டெல்லியின் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டை அருகே நேற்று மாலை கார் வெடித்துச் சிதறும் சில மணி நேரங்களுக்கு முன்னர், “ரெடிட்” (Reddit) சமூக வலைத்தளத்தில் ஒரு பயனர் அந்தப் பகுதியில் போலீஸ் படையினரும், ராணுவத்தினரும் அதிகமாக திரண்டிருந்ததாக பதிவிட்டிருந்தார்.
“டெல்லியில் ஏதாவது நடக்கிறதா?” என்ற தலைப்பில் பதிவிட்டுள்ள அந்த பயனர் பழைய டெல்லி வழியாகச் சென்றபோது, பின்னர் வெடிப்பு நிகழ்ந்த அதே பகுதியில், கடுமையான போலீஸ் மற்றும் ராணுவ பாதுகாப்பு காணப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார்.
நேற்று மாலை சுமார் 4 மணியளவில் ரெடிட் (Reddit) தளத்தில் ஒரு பதிவு பகிரப்பட்டது. அதே நாளில் இரவு 7 மணிக்குள், செங்கோட்டை அருகே கார் வெடிப்பில் சுமார் 11 பேர் உயிரிழந்ததுடன், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது..
அந்த பதிவில், தன்னை 12-ஆம் வகுப்பு மாணவராகக் கூறிய ரெடிட் பயனர், வெடிப்பு நிகழ்ந்த இடத்துக்கு அருகிலுள்ள வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டையை சுட்டிக்காட்டியிருந்தார்.
ரெடிட் பயனரின் பதிவு வைரல்
“நான் இப்போதுதான் பள்ளியில் இருந்து (12ஆம் வகுப்பு மாணவன்) திரும்பி வந்தேன். எங்கெல்லாம் பார்த்தாலும் போலீஸ், ராணுவம், ஊடகம் — எல்லாம் நிறைந்திருந்தது. செங்கோட்டை அருகிலும், மெட்ரோ நிலையத்திலும் கூட. மெட்ரோவில் பயணம் செய்தபோது, இந்த அளவு ராணுவத்தை நான் இதுவரை பார்த்ததே இல்லை. இன்று ஏதாவது நடக்கிறதா?” என அந்த ரெடிட் பயனர் எழுதியிருந்தார்.
இப்போது அந்த பதிவு ரெடிட் தளத்தில் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது. இதே பதிவை பலர் எக்ஸ் தளத்திலும் பகிர்ந்துள்ளனர். இரண்டு சமூக வலைத்தளங்களிலும், பதிவின் நேரம் கார் வெடிப்புக்கு சில மணி நேரங்களுக்கு முன் என்பதால், பலரும் அதிர்ச்சி மற்றும் ஆச்சர்யம் தெரிவித்துள்ளனர்.
வெடிப்புக்கு சில மணி நேரங்களுக்கு முன் பதிவிட்ட ரெடிட் பயனரைப் பற்றி பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். ஒருவர், “தனக்கு தெரியாமலேயே நம்மை எச்சரிக்க முயன்றுள்ளார்..” என பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பயனர் எதிர்காலத்தை துல்லியமான இடத்துடன் அவர் கணித்துள்ளார்..” என குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து கோணங்களிலும் விசாரணை
தற்போது, வெடிப்பு மற்றும் தீவிரவாத சதி இடையே நேரடி தொடர்பு ஏதும் இருப்பதாக விசாரணையாளர்கள் உறுதி செய்யவில்லை. ஆனால், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
வெடிப்புக்குப் பிறகு ஊடகங்களைச் சந்தித்த அவர், தேசிய விசாரணை முகமை (NIA), உளவுத்துறை (IB), மற்றும் தில்லி காவல்துறையின் தீவிரவாத தடுப்பு பிரிவு ஆகியவை இணைந்து இந்தச் சம்பவத்தை “அனைத்துத் திசைகளிலும்” விசாரித்து வருவதாக கூறினார்.
இதனிடையே டெல்லி கார் வெடிப்பு சம்பவத்திற்கு காரணமான சதிகாரர்கள் யாரும் தப்ப முடியாது என்றும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும் பிரதமர் மோடி சபதம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..



