சென்னையை அடுத்த பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் கட்டுமான திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்தது.
தமிழகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய தலைமைச் செயலக வளாகத்தைப் பட்டினப்பாக்கத்தில் அமைப்பது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் முடிவு செய்யப்பட்டது. சட்டப்பேரவையில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் விஜய், ரூ.1,200 கோடி செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்பதற்கான அரசாணையையும் வெளியிட்டார்.
இந்நிலையில், இத்திட்டத்தால் அரசு கஜானாவுக்குப் பெரும் நிதி இழப்பு ஏற்படுவதாகவும், இத்திட்டத்தை உடனடியாக கைவிட உத்தரவிடக் கோரியும் வழக்கறிஞர் ஆர்.எஸ். தமிழ்வேந்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். “மக்களுக்கான நிர்வாக கட்டடம் கட்டுவதை எப்படிப் பண விரயம் என்று கூற முடியும்? ஒரு குறிப்பிட்ட இடத்தில் கட்டடம் கட்டக் கூடாது என அரசுக்குக் கட்டளையிடும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு இல்லை என்றார்.
மேலும், எவ்வித அடிப்படை ஆய்வோ தகுந்த ஆதாரங்களோ இல்லாமல், வெறும் விளம்பர நோக்கத்திற்காக மட்டுமே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட நீதிபதிகள், அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது என தெரிவித்தனர். நீதிமன்றத்தின் கடுமையான போக்கை தொடர்ந்து, மனுவை வாபஸ் பெற மனுதாரர் அனுமதி கோரினார். இதையடுத்து, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Read More : ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு செக்!. இனி நேரடியா கைது செய்ய முடியாது!. கடிவாளம் போடும் மத்திய அரசு!



