மயிலாடுதுறை மாவட்டம் சித்தர்காடு பகுதியில் இயங்கி வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நவீன அரிசி ஆலையால் கடுமையான சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக கூறி, அப்பகுதியைச் சேர்ந்த அன்புராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், ஆலையின் மாசுக் கட்டுப்பாட்டு விதிமீறல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுடுகாட்டில் அமைதியான முறையில் போராட்டம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கோரியதாகவும், ஆனால் அந்த விண்ணப்பத்தை காவல்துறை நிராகரித்துவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். எனவே, போராட்டம் நடத்த உரிய அனுமதி வழங்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என அவர் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, காவல்துறைக்கு சரமாரி கேள்விகளை எழுப்பிக் கடுமையான கண்டனம் தெரிவித்தார். “சுடுகாட்டில் போராட்டம் நடத்த அனுமதி கோருவதில் காவல்துறையினருக்கு என்ன பிரச்சனை இருக்க முடியும்? காற்று மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.
பொதுமக்கள் தங்களின் பாதிப்புகளை அரசுக்கு உணர்த்தவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சுடுகாட்டை ஒரு பொருத்தமான இடமாகவே தேர்வு செய்துள்ளனர். மக்களின் ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை அரசு முடக்க முடக்க, ஆட்சியாளர்களுக்கு எதிரான மக்கள் அதிருப்திதான் மேலோங்கும்” என்று காட்டமாக தெரிவித்தார்.
“தற்போதைய ஆட்சியில் திராவிடர் கழகம், திமுக, அதிமுக, ஆர்எஸ்எஸ் என எந்த அமைப்புகள் அனுமதி கோரினாலும் காவல் துறை அனுமதி மறுக்கிறது. ஆளுங்கட்சியின் கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கே போராட அனுமதி கிடைக்காமல் நீதிமன்றத்தை நாடும் அவல நிலை உள்ளது. ஜனநாயக நாட்டில் எங்குமே போராட்டம் நடத்த அனுமதிக்க மாட்டோம் என்றால், மக்கள் அனைவரும் உயர்நீதிமன்றத்தின் வாசலில்தான் வந்து போராட வேண்டி வரும்” என்று எச்சரித்து, காவல்துறையின் இந்த அணுகுமுறைக்கு தனது கடுமையான அதிருப்தியைப் பதிவு செய்தார்.
Read More : நாளை விடைபெறுகிறது.. ஆரம்பமும் ஆகிறது! தமிழகத்துக்கு உச்சக்கட்ட அலர்ட்! கொட்டித் தீர்க்கப்போகும் அதி கனமழை!



