நேபாளம் தற்போது கடும் அரசியல் கலக்கத்தில் சிக்கியுள்ளது. சமூக ஊடகத் தடைக்கு எதிராக வெடித்த இளைஞர்களின் ‘ஜென் Z’ போராட்டம், பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் ஆட்சியையே குலைத்துவிட்டது. குறிப்பாக பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் இந்தியா பயணத்திற்கு முன்னதாகவும், அவர் சீனாவிலிருந்து திரும்பிய பின்னரும் ஏற்பட்டுள்ளன. இந்த குறிப்பிட்ட காலத்தில் நடக்கும் போராட்டம் பல கேள்விகளை ஏற்படுத்தி உள்ளது.
காத்மாண்டு உள்ளிட்ட பல நகரங்களில் மாணவர்கள், இளைஞர்கள் வீதிகளில் குதித்து போராட்டம் நடத்தினர். பாதுகாப்புப் படையினருடன் மோதலில் குறைந்தது 20 பேர் உயிரிழந்து, 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நிலைமை தீவிரமாகியதால், நேபாளத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. போராட்ட அழுத்தத்துக்கிடையே, ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
சமீபத்தில் நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி சீனா பயணம் சென்றிருந்தார். இந்த மாத இறுதியில் இந்தியாவுக்குச் செல்ல திட்டமிட்டிருந்தார். சமூக ஊடகத் தடையை ஒலி ரத்து செய்த ஒரே நாளில் போராட்டங்கள் வெடித்தது, பல கேள்விகளை எழுப்புகிறது. நேபாளம் பாரம்பரியமாக இந்தியாவுடன் நெருக்கமான உறவை பேணி வந்தாலும், ஒலி ஆட்சியில் சீனாவுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. 2024 டிசம்பரில் நேபாளம் சீனாவின் ‘பெல்ட் அண்ட் ரோடு’ திட்டத்தில் சேர்வதற்கான அடிப்படை ஒப்பந்தம் செய்தது.
இதனால், “அமெரிக்கா ஒலியின் ஆட்சியை கவிழ்த்துவிட்டதா?” என்ற சந்தேகம் எழுந்துள்ளது. வங்கதேசத்தில் ஹசீனா ஆட்சியை மாணவர் போராட்டங்கள் கவிழ்த்தது போலவே, நேபாளமும் அமெரிக்கா–சீனா அதிகாரப் போட்டியின் களமாக மாறியுள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
நேபாளம் இந்தியாவின் முக்கிய அண்டை நாடு. சமீபத்திய அரசியல் அதிர்வுகள், இந்தியா-சீனா-அமெரிக்கா இடையிலான ஆட்டத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. அடுத்தடுத்த வாரங்களில், நேபாள அரசியல் எங்கு செல்கிறது என்பது தெற்காசிய புவியியல் அரசியலுக்கு (Geopolitics) மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.



