மழை பெய்யும் நாட்களில் வீட்டைச் சுத்தமாக வைத்திருந்தாலும், ஜன்னல் கண்ணாடி மட்டும் ஈரமாகி தண்ணீர் வழிவது பலருக்கும் தலைவலியாக இருக்கும். குறிப்பாக இந்த ஈரம் ஜன்னல் சட்டத்தில் நீண்ட நேரம் இருந்தால், மரம் மற்றும் சுவர் பகுதிகளில் சேதம் ஏற்படுவதோடு பூஞ்சையும் உருவாகலாம். இதற்காக பெரிய செலவு செய்யாமல் வீட்டிலேயே முயற்சி செய்யக்கூடிய ஒரு எளிய வழியாக ஸ்டீல் கரண்டி தந்திரம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
முதலில் தெரிந்துகொள்ள வேண்டியது…
ஜன்னலில் தண்ணீர் வருவதற்கு மழைநீர் கண்ணாடிக்குள் புகுவது அவசியமில்லை. அறைக்குள் இருக்கும் ஈரமான காற்று, வெளியே இருக்கும் குளிர்ந்த கண்ணாடியைத் தொடும்போது அதில் உள்ள நீராவி சிறிய துளிகளாக மாறுகிறது. இதுதான் கண்ணாடியில் ‘condensation’ என்று அழைக்கப்படும் ஈரத்தன்மையை உருவாக்குகிறது. அந்த துளிகள் ஒன்றோடு ஒன்று சேரும்போது, அவை கண்ணாடியில் இருந்து கீழே வழிந்து ஜன்னல் ஓரத்தில் தேங்கத் தொடங்குகின்றன.
கரண்டியை எங்கே வைக்க வேண்டும்?
இதற்கான வீட்டு தந்திரமாக, ஒரு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கரண்டியை ஜன்னல் ஓரத்தில் நிலையாக வைக்கலாம் என்று கூறப்படுகிறது. கரண்டியில் தண்ணீர் தேங்கும் வகையில் அதை சரியான நிலையில் வைத்திருக்க வேண்டும். ஸ்டீல் வெப்பத்தை விரைவாக கடத்தும் உலோகம் என்பதால், குளிர்ந்த சூழலில் கரண்டியும் குளிர்ச்சியடையும். ஈரமான காற்று அதன் மேற்பரப்பைத் தொடும்போது சிறிய அளவில் நீர்த்துளிகள் உருவாகலாம். இதனால் ஜன்னல் ஓரத்தில் உருவாகும் ஈரத்தை ஒரு குறிப்பிட்ட இடத்தில் திரட்டும் வாய்ப்பு கிடைக்கிறது.
ஆனால் ஒரு விஷயத்தை மறந்துவிடாதீங்க!
கரண்டி வைத்தால் ஜன்னல் கண்ணாடியில் நீர்த்துளிகள் வருவது முழுமையாக நின்றுவிடும் என்று எதிர்பார்க்கக்கூடாது. இது அறையின் ஈரப்பதத்தை குறைக்கும் கருவியும் கிடையாது. ஜன்னல் தொடர்ந்து அதிகமாக ஈரமாகிக் கொண்டிருந்தால், அறைக்குள் ஈரப்பதம் அதிகமாக இருக்கிறதா என்பதைத்தான் முதலில் கவனிக்க வேண்டும்.
உண்மையான தீர்வு என்ன?
சமையல் செய்யும்போதும், குளித்த பிறகும் உருவாகும் ஈரமான காற்று வீட்டிற்குள் தேங்காமல் வெளியேறுவதற்கு காற்றோட்டம் இருக்க வேண்டும். ஜன்னல்களை அவ்வப்போது திறந்து வைப்பது, ஈரமான பகுதிகளை உடனடியாகத் துடைப்பது போன்ற எளிய நடவடிக்கைகளும் உதவலாம். ஈரப்பதம் தொடர்ந்து அதிகமாக இருந்தால், தேவைக்கேற்ப dehumidifier பயன்படுத்துவதையும் பரிசீலிக்கலாம்.
மேலும், கரண்டியில் தண்ணீர் தேங்கினால் அதை உடனடியாக அகற்ற வேண்டும். இல்லையெனில், தண்ணீரை கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக அதே இடத்தில் ஈரப்பதம் நீடிக்கலாம். மொத்தத்தில், ஸ்டீல் கரண்டி தந்திரம் ஒரு எளிய வீட்டுத் தீர்வாக இருக்கலாம். ஆனால் இது நிரந்தரத் தீர்வு அல்ல. ஜன்னலில் நீர்த்துளிகள் உருவாகும் காரணமான அதிகப்படியான ஈரப்பதத்தை கட்டுப்படுத்துவதுதான் முக்கியம்.
Also Read: வீட்டு ஜன்னலை எப்போதும் மூடியே வைக்கிறீர்களா?… காற்றோட்டம் இல்லாமல் இருந்தால் என்ன ஆகும் தெரியுமா



