உலகிலேயே காதலின் ஆகச்சிறந்த அடையாளமாக பார்க்கப்படும் தாஜ்மஹாலை மாதிரியாகக் கொண்டு, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது மனைவிக்காக 4 படுக்கையறை வசதிகள் கொண்ட பிரம்மாண்ட வீடு ஒன்றை கட்டியுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் புர்ஹான்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த் பிரகாஷ் சௌக்சி என்பவரால் கட்டப்பட்ட இந்த வீட்டின் அழகையும், அதன் பின்னணியில் உள்ள காதலையும் விவரிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அசல் தாஜ்மஹாலைப் போலவே பளிங்கு வெள்ளை நிறம், சுற்றிலும் அழகான தூண்கள் மற்றும் மையத்தில் ஒரு பெரிய கோபுரத்துடன் இதன் வெளிப்புற வடிவமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. வீட்டைச் சுற்றிப் பார்த்த தொகுப்பாளர் இதை “அன்பின் மிக அழகிய அடையாளம்” என்று வர்ணித்த போது, வீட்டின் உரிமையாளரின் மகன் “என் தந்தை என் தாய்க்காகக் கட்டிய காதலின் அடையாளம் இது” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
வெளியே மட்டுமன்றி, வீட்டின் உள்பகுதியும் தாஜ்மஹால் போன்றே அரச தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்டமான படிக்கட்டுகள், 24 அடி உயரமான கூரைகள் மற்றும் சொகுசு மரச்சாமான்களுடன் உட்புறம் நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது. பிரமாண்டமான இந்த ஆடம்பர வீட்டிற்குள் ஒரு எருமை மாட்டின் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றித் தொகுப்பாளர் கேட்டபோது, வீட்டின் உரிமையாளரின் தந்தை தனது இளமைக் காலத்தில் எருமைப் பால் விநியோகம் செய்து வந்ததாகவும், தங்கள் ஆரம்பக்கால உழைப்பை மறந்துவிடக் கூடாது என்ற நினைவாகவே அந்தச் சிலை வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த வீட்டை முழுமையாக கட்டி முடிக்க சுமார் 1.75 ஆண்டுகள் ஆகியுள்ளன. அசல் தாஜ்மாஹாலை நேரில் சென்று அளவெடுத்து, அங்கு மீட்டரில் இருந்த அனைத்து அளவுகளையும் அடி கணக்காகக் குறைத்து இந்த வீட்டை உருவாக்கியுள்ளனர். வெறும் கட்டிடக்கலையாக இல்லாமல் கணவன் தனது மனைவிக்கு வழங்கிய காதலின் காவியமாக உருவெடுத்துள்ள இந்த இல்லம் தற்போது இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.



