லாக்கப் மரணங்கள் ஆளும் கட்சியால் நடக்கிறது எனச் சொல்ல முடியாது. எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், குடியரசுத் தலைவர் ஆட்சியே இருந்தாலும் இதுபோன்ற சம்பவங்கள் தான் நடக்கிறது என திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். இவரை ஜூன் 27-ம் தேதி திருட்டு வழக்கு தொடர்பாக மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீஸார் அழைத்துச் சென்றனர். போலீஸார் தாக்கியதில் ஜூன் 28-ம் தேதி அஜித்குமார் உயிரிழந்தார்.
இதனிடையே இச்சம்பவம் குறித்து திருப்புவனம் போலீஸார் பிஎன்எஸ்எஸ் 190 (2) (ஏ) பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து நீதித்துறை விசாரணைக்கு அனுப்பப்பட்டது. இதனிடையே தனிப்படை காவலர்கள் பிரபு, கண்ணன், சங்கரமணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் ஆகிய 6 பேரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் பணியிடை நீக்கம் செய்தார். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். லாக்கப் மரணங்கள் ஆளும் கட்சியால் நடக்கிறது எனச் சொல்ல முடியாது. எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், குடியரசுத் தலைவர் ஆட்சியே இருந்தாலும் இதுபோன்ற சம்பவங்கள் தான் நடக்கிறது என திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சிக்கு எம்.பி திருமாவளவன் பேட்டி:
தமிழ்நாடு அரசு தொடர்புடைய காவலர்கள் அனைவரையும் உடனடியாகக் கைது செய்துள்ளது. அது ஆறுதலைத் தருகிறது. இருப்பினும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாக நீடிக்கிறது. திமுக ஆட்சியில் மட்டுமில்லை.. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழ்நாடு மட்டுமின்றி.. இந்தியா முழுக்கவே லாக்கப் மரணங்கள் தொடர்கிறது. சாதாரண வழக்குகளிலும் கூட புலன் விசாரணை என்ற பெயரில் எளிய மக்களும் கொடூரமான முறையில் தாக்கப்படுகிறார்கள். படுகொலை செய்யப்படுகிறார்கள். இது போன்ற சம்பவங்கள் நீடிக்கிறது.
இது ஆளும்கட்சியால் நடக்கிறது எனச் சொல்ல முடியாது. எந்தக் கட்சி இருந்தாலும், குடியரசுத் தலைவர் ஆட்சியே இருந்தாலும் இதுபோன்ற சம்பவங்கள் தான் நடக்கிறது. போலீசாருக்கு பொதுவாகவே ஒரு உளவியல் இருக்கிறது. மக்களுக்கு எதிரானதாகவே அந்த உளவியல் இருக்கிறது. அந்தக் கோணத்தில் தான் நாம் இந்தப் பிரச்சினையை அணுக வேண்டி இருக்கிறது. இந்த விஷயத்தில் திமுக அமைச்சர் தலையிட்டார் அல்லது திமுக மாவட்ட செயலாளர் தலையிட்டார் என சொல்ல முடியாது என்றார்.