’தைரியம் இருந்தால் தனிக் கட்சி தொடங்கி பாருங்கள்’ என எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் சவால் விடுத்துள்ளார்.
சென்னையில் தனது ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், ”ஜெயலலிதாவுக்கு நிரந்தர பொதுச்செயலாளர் என்ற அங்கீகாரம் வழங்கப்பட்டதை ரத்து செய்பவர்களை இந்த நாடு மன்னிக்குமா? எப்போதுமே அதிமுகவின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் என்று கூறினார். எடப்பாடி பழனிசாமியிடம் மாவட்ட செயலாளர்கள் இருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் பணம் மட்டும்தான் என்று கூறிய ஓபிஎஸ், தைரியமிருந்தால் தனிக்கட்சி தொடங்கிப் பாருங்கள் என எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விடுத்தார்.

பொதுக்குழுவுக்கு தாம் வரக்கூடாது என்பதற்காக சதித்திட்டங்கள் தீட்டப்பட்டதாகவும், டிடிவி தினகரனுடன் இணைந்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களித்திருந்தால் அன்றைக்கே அதிமுக ஆட்சி கவிழ்ந்திருக்கும் என்று கூறினார். தமது மகனும் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத்தை மத்திய அமைச்சர் ஆகவிடாமல் தடுத்தது எடப்பாடி பழனிசாமிதான்” என்று ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டினார்.