தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 23-ம் தேதி நடந்து முடிந்துள்ள நிலையில் தேர்தல் முடிவுகளுக்காக மக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.. இந்த தேர்தலில் திமுக மீண்டும் பெரும்பான்மை உடன் ஆட்சியமைக்கும் என்று பல்வேறு கருத்துக்கணிப்புகள் கூறினாலும் இந்த தேர்தலில் விஜய்யின் தவெக புதிதாக களமிறங்கி உள்ளதால் விஜய் தாக்கம் எப்படி எதிரொலிக்கும், விஜய் யாருடைய வாக்குகளை பிரிப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது..
இந்த நிலையில் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் விஜய்யின் வெற்றி குறித்து பேசியுள்ளார்.. பிரபல சேனலுக்கு பேட்டியளித்த அவர் ” விஜய் போட்டியிடும் தொகுதிகளிலேயே அவர் வெற்றி பெறுவது கடினம்.. 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தவெக டெபாசிட் இழக்க நேரிடும்..
சமீபத்திய தேர்தல் தரவுகளின் படி, வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்திருந்தாலும், அது ஆளும் கட்சிக்கு எதிரான அலை இல்லை.. வாக்கு சதவீதத்தை விட அப்சல்யூட் ஓட்டர் கவுண்ட் எனப்படும் உண்மையான வாக்காளர்களின் எண்ணிக்கையே முக்கியம்..
2021 தேர்தலை விட சில தொகுதிகளில் வாக்கு சதவீதம் அதிகமாக தெரிந்தாலும் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது..
1989 தேர்தலில் ராஜீவ் காந்தி மற்றும் சோனியா காந்தி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தாலும், அடிமட்ட அளவில் வலுவான கட்டமைப்பு கொண்ட திமுக ஆட்சியை பிடித்தது.. அதே போல் விஜய்யின் செல்வாக்கு என்பது 8 முதல் 12 % மட்டுமே இருக்கும், அது டெபாசிட் வாங்குவதற்கு தேவையான 16.6 சதவீதத்தை விட குறைவு..
திமுக, அதிமுக போன்ற கட்சிகளுக்கு இருக்கும் பூத் மேனேஜ்மெண்ட் வலிமை விஜய் கட்சிக்கு இல்லை.. இது ஒரு முக்கிய பலவீனம்..
ஒரு வாக்காளர் வாக்குச்சாவடிக்குள் சென்று சின்னத்தை கண்டறிந்து வாக்களிப்பது வரை அவர்களுக்கு வழிகாட்ட முறையான பயிற்சி பெற்ற தொண்டர்கள் தேவை.. இந்த விஷயத்தில் தவெக இன்னும் பின் தங்கியே இருக்கிறது..
திராவிட சித்தாந்தம், சமூக நீதி மற்றும் அரசின் நலத்திட்டங்களால் பயனடைந்த வாக்காளர்கள் அவ்வளவு எளிதாக மாற்றுக்கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள்.. குறிப்பாக பெரம்பூர் போன்ற தொகுதிகளில் சிட்டிங் எம்.எல்.ஏக்களின் உள்ளூர் செல்வாக்கை மீறி விஜய் வெற்றி பெறுவது மிக மிகக் கடினம் என்பதே கள யதார்த்தம்..
தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பது வெறும் நட்சத்திர அந்தஸ்து மட்டுமல்ல, அந்தந்த தொகுதிகளில் வேட்பாளர்கள் செய்துள்ள பணிகள், கட்சியின் கட்டமைப்பு தான்.. அந்த வகையில் 2026 தேர்தல் களம் விஜய்க்கு ஒரு மிகப்பெரிய சவாலாக இருக்கும்..” என்று தெரிவித்துள்ளார்..
மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வரும் போது தான் இந்த அரசியல் கணிப்புகள் எந்தளவு உண்மையாகும் என்பது முழுமையாக தெரியவரும்..



