அதிமுக–பாஜக கூட்டணியில், டிடிவி தினகரனின் அமமுக மற்றும் ஓ.பன்னீர் செல்வம் அணியை இணைக்க முயற்சிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக தொண்டர் உரிமை மீட்பு குழு நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தியது. இந்ட கூட்டத்தில், யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அப்போது, எடப்பாடி பழனிசாமி இருக்கும் எந்த கூட்டணியிலும் இணைவதற்கு நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
எடப்பாடி பழனிசாமி இல்லாத எந்த அணியாக இருந்தாலும் சேர தயாராக இருக்கிறோம் என நிர்வாகிகள் ஒருமித்த கருத்து தெரிவித்தனர். கூட்டத்தில் பேசிய குன்னம் ராமச்சந்திரன், “மூன்று தொகுதிகளுக்காக எடப்பாடி இருக்கும் என்.டி.ஏ கூட்டணியில் சேரக்கூடாது” என்று வலியுறுத்தினார். அதேபோல், வைத்திலிங்கம் பேசுகையில், “பழனிசாமி இல்லாத அதிமுகவில்தான் இணைவோம். குரங்கு கையில் சிக்கிய பூமாலை போல அதிமுக மாறிவிட்டது” என்று விமர்சித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர் செல்வம், “தொண்டர்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம் அதிமுக. ஒருகாலத்தில் வெல்ல முடியாத இயக்கமாக இருந்தது. ஆனால் இன்று எடப்பாடி பழனிசாமி அதிமுகவை படுகுழியில் தள்ளிவிட்டார்” என்று கடுமையாக சாடினார்.
மேலும் அவர், “11 தேர்தல்களில் தொடர்ந்து தோல்வி அடைந்து, அதிமுகவை படுபாதாளத்தில் தள்ளியவர் எடப்பாடி பழனிசாமி. அவரது பெயரை சொல்லவே வெட்கமாக இருக்கிறது. அவரை வீழ்த்துவதுதான் நமது முதல் நோக்கம். வரும் தேர்தலில் அவருக்கு கட்டாயம் பாடம் புகட்ட வேண்டும். தை பிறந்தால் வழி பிறக்கும்” என்று கூறினார். இந்த கூட்டம் மூலம், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நிலைப்பாட்டில் ஓபிஎஸ் அணி உறுதியாக இருப்பது மீண்டும் வெளிப்பட்டுள்ளது.



