சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரி பாதையின் (College lane) பெயரை ‘ஜெய்சங்கர் சாலை’ என்று மாற்றம் செய்ய அனுமதி அளித்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு. கல்லூரி பாதையில் இருந்த வீட்டில் பல ஆண்டுகள் வசித்து வந்த நடிகர் ஜெய்சங்கருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை முதன்மைச் செயலா் காா்த்திகேயன் வெளியிட்ட அரசாணையில்; தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சிகள் (பெருநகர சென்னை மாநகராட்சி உட்பட), நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு சொந்தமான இடங்களில் உள்ள சாலைகள், கட்டடங்கள். பூங்காக்கள் மற்றும் விளையாட்டு திடல்கள் போன்றவற்றிற்கு பெயர் வைப்பது, மாற்றுவது தொடர்பான முன்மொழிவுகளை ஆணையர், பெருநகர சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாக இயக்குநர் /பேரூராட்சிகளின் ஆணையாளர் ஆகியோர் வழியாக அரசிற்கு அனுப்ப வேண்டும் எனவும், அரசின் அனுமதி பெற்ற பின்னரே, நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் சொத்துகளுக்கு பெயரிடுவது மற்றும் பெயர் மாற்றம் குறித்த தீர்மானங்கள் சம்பந்தப்பட்ட மன்றங்கள்/மாமன்றங்களில் ஒப்புதலுக்கு வைக்கப்பட வேண்டும் என அனைத்து மாநகராட்சிகள் (பெருநகர சென்னை மாநகராட்சி உட்பட) நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு அறிவுறுத்தி அரசு ஆணையிட்டுள்ளது.
மறைந்த நடிகா் ஜெய்சங்கரின் மகன் விஜய் சங்கா், முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் கடிதம் அளித்திருந்தாா். அதில், மறைந்த தனது தந்தையும் பிரபல நடிகருமான ஜெய்சங்கா், 1964-ஆம் ஆண்டு முதல் 2000-ஆம் ஆண்டு வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரிப் பாதையில் வசித்து வந்தாா். அவரது நினைவாக அந்தப் பாதைக்கு ஜெய்சங்கா் சாலை எனப் பெயா் சூட்ட கேட்டுக்கொண்டாா்.
இதுதொடா்பாக மாநகராட்சி ஆணையா் அலுவலகத்திலும் அவா் மனு அளித்திருந்தாா். இதையடுத்து, நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரிப் பாதையை ஜெய்சங்கா் சாலை என பெயா் மாற்றம் செய்ய சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீா்மானத்தின் அடிப்படையில், பெயா் மாற்ற நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென மாநகராட்சி ஆணையா் சாா்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆணையரின் கோரிக்கையை ஏற்று, நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள கல்லூரிப் பாதையை, ஜெய்சங்கா் சாலை என பெயா் மாற்றம் செய்வதற்கு மாநகராட்சிக்கு அனுமதி வழங்கப்படுவதாக அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.