தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையில் கரூர் வேலுச்சாமிபுரத்தில் நேற்று இரவு 7 மணிக்குமேல் நடைபெற்ற பிரசாரத்தின் போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த பரிதாபகரமான சம்பவத்தில் 10 குழந்தைகள், 17 பெண்கள், 12 ஆண்கள் என மொத்தம் 39 பேர் உயிரிழந்துள்ளனர்.
கூட்ட நெரிசலில் காயமடைந்த 52 பேர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 11 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். மேலும் தனியார் மருத்துவமனைகளில் 61 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் மொத்தம் 113 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலர் ஆபத்தான நிலையில் இருப்பதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தச் செய்தி தமிழகமெங்கும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடலுக்கு எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி செலுத்தினார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுடைய குடும்பத்துடன் சந்தித்து ஆறுதலும் தெரிவித்தார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ” விஜய் பிரச்சாரத்தில் இதற்கு முன்பு எந்த பிரச்சனையும் இல்லை. TVK ஏற்கனவே நான்கு மாவட்டத்தில் பிரச்சாரம் செய்துள்ளது.
ஏற்கனவே நடந்த கூட்டத்தை பார்த்து தமிழக அரசும், காவல்துறையும் தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். விஜய் பேசும்போது திடீரென மின் விளக்குகள் அணைந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அதிமுக கூட்டத்திலும் முழுமையான பாதுகாப்பு கொடுக்கவில்லை. காவலர்கள் பொதுமக்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடவில்லை. முதலமைச்சர நிகழ்ச்சிகளுக்கு ஆயிரக்கணக்கான காவலர்கள் பாதுகாப்புக்கு நியமிக்கப்படுகிறார்கள்.
இந்த அரசு ஒரு தலைப்பட்சமாக நடத்துகிறது. இந்தியாவிலேயே அரசியல் கட்சி நடத்தும் பொதுக்கூட்டத்தில் இத்தனை உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது இதுதான் முதல் முறை. விஜயின் கூட்டத்துக்கு முறையான பாதுகாப்பு கொடுத்திருந்தால் இறப்புகளை தடுத்திருக்கலாம்” என கூறி இருக்கிறார்.



