தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கரூர் சம்பவத்தின் விசாரணை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது, கட்டுக்கடங்காத மக்கள் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரம் நாட்டையே உலுக்கியது. உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே தவெக-வின் முக்கிய நிர்வாகிகளான பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மற்றும் இணைச் செயலாளர் நிர்மல் குமார் உள்ளிட்டோரிடம் சிபிஐ அதிகாரிகள் விரிவான விசாரணை நடத்தியுள்ளனர். கரூர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் விஜய்யின் பிரச்சார வாகன ஓட்டுநர் ஆகியோரிடமும் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. டெல்லி சிபிஐ அலுவலகத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்ற தீவிர விசாரணையை தொடர்ந்து, கட்சியின் தலைமை என்ற அடிப்படையில் விளக்கம் அளிக்க விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
இந்த நிலையில் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராவதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி சென்றடைந்தார்.. விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக 20 கி.மீ பயணித்த விஜய் சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.. விஜய் உடன் ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் உள்ளிட்டோரும் சென்ரனர்.. மத்திய அரசின் Y பிரிவு பாதுகாப்பு அடிப்படையில் விஜய் செல்லும் அனைத்து இடங்களிலும் டெல்லி காவல்துறை பாதுகாப்பு வழங்கியது.
டெல்லியில் சிபிஐ அலுவலகம் அமைந்துள்ள லோதி சாலையில் பேரிகாட் அமைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.. ஊகடகத்தினருக்கும் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது..
இந்த விசாரணையில் பல்வேறு கேள்விகளை விஜய்யிடம் எழுப்ப சிபிஐ திட்டமிட்டுள்ளது.. 7 மணி நேரம் தாமதமாக பரப்புரை நடைபெற்றது ஏன்? அதிகளவில் கூட்டம் கூடியது தொடர்பான தகவல்கள் காவல்துறையிடம் பகிரப்பட்டதா? பெருங்கூட்டத்திற்கு மத்தியில் விஜய்யின் வாகனம் ஊர்ந்து செல்ல எப்படி அனுமதிக்கப்பட்டது? விஜய்யின் பிரச்சார வாகனத்தின் நகர்வுகள் ஏற்கனவே திட்டமிடப்பட்டதா? இல்லையா? கூட்ட நெரிசலை சமாளிக்க தவெக சார்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்ப சிபிஐ திட்டமிட்டுள்ளது.. விஜய்யிடம் இன்றும் நாளையும் விசாரணை நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..



