தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையில் கரூர் வேலுச்சாமிபுரத்தில் நேற்று இரவு 7 மணிக்குமேல் நடைபெற்ற பிரசாரத்தின் போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த பரிதாபகரமான சம்பவத்தில் 10 குழந்தைகள், 17 பெண்கள், 12 ஆண்கள் என மொத்தம் 39 பேர் உயிரிழந்துள்ளனர்.
கூட்ட நெரிசலில் காயமடைந்த 52 பேர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 11 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். மேலும் தனியார் மருத்துவமனைகளில் 61 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் மொத்தம் 113 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலர் ஆபத்தான நிலையில் இருப்பதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தச் செய்தி தமிழகமெங்கும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு .50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த விவகாரத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்திருந்தார்.
கரூரில் நடந்த அரசியல் பிரசார கூட்டத்தின்போது நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் வருத்தம் அளிக்கிறது என்றும், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு, இந்த கடினமான நேரத்தில் வலிமை கிடைக்கவும், காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டிருந்தார்.