கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர்.. இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. விஜய்யின் கால தாமதமான வருகையால் இந்த கூட்ட நெரிசல் நடந்ததாகவும், தவெகவினரின் பொறுப்பற்ற தன்மையும் இந்த சம்பவத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.. ஆனால், தாங்கள் முதலில் கேட்ட இடத்தை அரசு வழங்கவில்லை, ஆம்புலன்ஸ் ஏன் வந்தது, இரவில் ஏன் உடற்கூறாய்வு செய்யப்பட்டது என பல கேள்விகளை எழுப்பினர்..
இந்த நிலையில் இந்த அனைத்து கேள்விகளுக்கும் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. கரூர் துயர சம்பவம் தொடர்பாக அமுதா ஐஏஎஸ் உள்ளிட்ட அதிகாரிகள் இதுகுறித்து விளக்கம் அளித்தனர்.. அப்போது தவெக கேட்ட இடத்தை ஏன் ஒதுக்கவில்லை என்பது குறித்து பேசினர்.. மேலும் “ தவெக முதலில் கேட்ட இடத்தில் அமராவதி ஆற்றுப்பாலமும், பெட்ரோல் பங்கும் உள்ளது. அதனால் பாதுகாப்பு கருதி அந்த இடங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதே போல் 2 நாட்களுக்கு முன் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூட்டம் நடத்திய அதே இடம் தான் வேலுச்சாமிபுரம் தான் விஜய் கூட்டத்திற்கு ஒதுக்கப்பட்டது.. ஏற்கனவே கரூரில் காத்திருந்த கூட்டத்தோடு நாமக்கல்லில் இருந்து வந்த தொண்டர்களும் சேர்ந்ததால் கூட்ட நெரிசல் அதிகரித்தது.” என்று தெரிவித்தனர்..
கரூர் கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வந்தது ஏன் என்பது குறித்து தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது..
தவெக சார்பில் 7 ஆம்புலன்ஸ், தமிழ்நாடு அரசின் 6 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன. விஜய்யின் வாகனத்திற்கு பின்னால் 2 ஆம்புலன்ஸ்கள் வந்தன.. பலர் மயங்கி விழுந்ததால் அடுத்தடுத்து 33 ஆம்புலன்ஸ் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.. வெளி மாவட்டங்களில் இருந்து வந்ததையும் சேர்த்து மொத்தம் 50 ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்பட்டன. போலீஸ் வயர்லெஸ் மூலம் தகவல் தெரிவித்த பிறகே அரசு சார்பில் ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு சென்றது.. இரவு 7.20, 7.23 மணிக்கு ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு அவசர அழைப்பு வந்தது.. 7.20 மணிக்கு தொடங்கி 9.45 வரை ஆம்புலன்ஸ் சென்றது..” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் இரவில் உடற்கூராய்வு செய்யப்பட்டது ஏன் என்பது குறித்தும் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். அப்போது “ பெருஞ்சோகத்தில் இருக்கும் உறவினர்களுக்கு பதற்றம் அதிகமாகி விடும் என்பதாலும், பாதிக்கப்பட்ட உறவினர்களிடையே தேவையற்ற பதற்றத்தை தவிர்க்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் விரைந்து உடற்கூராய்வு செய்யப்பட்டது.. அதிக உயிரிழப்புகள் ஏற்படும் நேரத்தில் ஆட்சியரின் அனுமதி பெற்று இரவிலேயே உடற்கூராய்வு நடக்கும்.. அதனால் தான் அண்டை மாவட்டங்களில் இருந்து நிபுணர்கள், பிரேத பரிசோதனை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு உடற்கூராய்வு செய்யப்பட்டது.. ஏற்கனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் அவர்களின் உடல்களை வழங்க வேண்டும் என்பதற்காகவே உடற்கூராய்வு செய்யப்பட்டது. 40-வது உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்ட போது அடுத்த நாள் மாலை 3.45 மணி ஆகிவிட்டது..” என்று தெரிவித்தனர்..
மேலும் மின்சாரம் ஏன் நிறுத்தப்பட்டது என்பது குறித்தும் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.. இதுகுறித்து பேசிய அவர்கள் ‘ ஜெனரேட்டரை சுற்றியுள்ள தகடுகளை தவெகவினர் பிரித்து சென்றதால் பாதுகாப்பு கருதி மின்சாரம் நிறுத்தப்பட்டது.. நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் தான் மின்சார ஜெனரேட்டரை ஆஃப் செய்தனர்..” என்று தெரிவித்தனர்.. தொடர்ந்து பேசிய அமுதா ஐஏஎஸ் “ கரூர் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்..” என்று எச்சரித்தார்..