காசி தமிழ் சங்கமம் 4.0, மத்திய கல்வி அமைச்சகம் டிசம்பர் 2 முதல் நடத்தவுள்ளது.
தமிழ்நாட்டிதிற்கும் காசிக்கும் இடையிலான ஆழமான நாகரிக தொடர்புகளைக் கொண்டாடுவதற்காக காசி தமிழ் சங்கமத்தின் நான்காவது பதிப்பை டிசம்பர் 2 முதல், மத்திய கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்கிறது. பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையால் ஈர்க்கப்பட்ட இந்த முயற்சி, இரு பகுதிகளுக்கும் இடையிலான நாகரிகம், கலாச்சாரம், மொழியியல் மற்றும் மக்களிடையேயான தொடர்புகளை தொடர்ந்து அதிகரிக்கிறது, இது ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வைப் பிரதிபலிக்கிறது.
இந்த நிகழ்ச்சித் திட்டத்தை ஐஐடி மெட்ராஸ் மற்றும் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக் கழகம் ஆகியவை ஒருங்கிணைக்கின்றன, மேலும் கலாச்சார அமைச்சகம், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், சுற்றுலா அமைச்சகம், ஜவுளி அமைச்சகம், உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம், இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம், உத்தரப்பிரதேச அரசு ஆகியவை இந்நிகழ்வை ஒருங்கிணைக்கின்றன.
காசி தமிழ் சங்கமம் 4.0-ன் கீழ் மேற்கொள்ளப்படும் முக்கிய முயற்சிகள்
தமிழ்நாடு மற்றும் காசிக்கு இடையிலான பண்டைய கலாச்சார வழிகளைக் கண்டறியும் “அகத்திய முனிவர் வாகனப் பயணம்” டிசம்பர் 2 அன்று தென்காசியில் துவங்கி, டிசம்பர் 10 அன்று காசியில் முடிவடைகிறது. இந்தப் பயணம் பாண்டிய மன்னர் ஸ்ரீ அதிவீர பராக்கிரம பாண்டியனின் முயற்சிகளைக் குறிக்கிறது. அவர் தமிழ்நாட்டிலிருந்து காசிக்கு தனது பயணத்தின் மூலம் பாரத கலாச்சாரத்தில் ஒற்றுமையின் செய்தியைப் பரப்பினார். மேலும் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோவிலைக் கட்டினார். ஒற்றுமையின் உணர்வை அடிக்கோடிட்டுக் காட்ட நகரத்திற்கு தென்காசி (தட்சிண காசி) என்று பெயரிட்டார்.
இந்தப் பயணம் சேர, சோழ, பாண்டிய, பல்லவ, சாளுக்கிய மற்றும் விஜயநகர காலங்களின் நாகரிக தொடர்புகளை எடுத்துக்காட்டும் அதே வேளையில், பாரம்பரிய தமிழ் இலக்கியம், சித்த மருத்துவம் மற்றும் பகிரப்பட்ட பாரம்பரியம் பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிக்கும். தமிழ் கற்கலாம்” என்ற பிரச்சாரத்தின் கீழ், காசியில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு இந்தி தெரிந்த 50 தமிழ் ஆசிரியர்கள் தமிழ் கற்பிப்பார்கள்.
காசியைச் சேர்ந்த மொத்தம் 300 கல்லூரி மாணவர்கள் 15 நாள் தமிழ் கற்றல் திட்டத்திற்காக தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நிறுவனங்களுக்குச் செல்வார்கள். சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு மையம் நோக்குநிலை மற்றும் கற்றல் பொருட்களை வழங்கும், அதே நேரத்தில் நடத்தும் நிறுவனங்கள் தமிழ்நாட்டின் பாரம்பரியம், மரபுகள் மற்றும் காசியுடனான வரலாற்று உறவுகளை எடுத்துக்காட்டும் கல்வி மற்றும் கலாச்சார சுற்றுப்பயணங்களை ஏற்பாடு செய்யும். இந்த மாணவர்கள் சென்னையில் வரவேற்கப்படுவார்கள்.



