தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த கவின் என்ற இளைஞர், கடந்த 27 ஆம் தேதி காதல் விவகாரத்தில் ஆணவ படுகொலை செய்யப்பட்டார். காதலியின் தம்பி சுர்ஜித், இந்த கொலையை செய்து விட்டு பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதன் தொடர்ச்சியாக, சுர்ஜித் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
சுர்ஜித்தின் பெற்றோரை இரண்டாவது மற்றும் மூன்றாவது குற்றவாளிகளாக முதல் தகவல் அறிக்கையில் காவல்துறையினர் சேர்த்தனர். வழக்கின் விசாரணை காரணமாக அவர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதனிடையே, இந்த கொலையில் சுர்ஜித்தின் பெற்றோருக்கும் தொடர்பு இருப்பதாகவும், அவர்கள் இருவரும் காவல்துறையில் பணிபுரிவதால் அவர்களை கைது செய்ய மறுப்பதாகவும் கூறி, கவினின் உடலை வாங்க மறுத்து அவருடைய குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதையடுத்து, வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட கையோடு, சுர்ஜித்தின் தந்தை சரவணன் கைது செய்யப்பட்டார். சுர்ஜித்தின் தாயாரையும் கைது செய்ய வேண்டும் என கவினின் உறவினர்கள் கோரிய நிலையில், அரசு தரப்பில் உடலைப் பெற்றுக் கொள்ள பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து, 5 நாள்களுக்குப் பிறகு கவினின் உடலைப் பெற்றுக் கொள்ள அவரது பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின் செல்வகணேஷின் உடல் பெற்றோரிடம் வெள்ளிக்கிழமை காலை ஒப்படைக்கப்பட்டது. திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் இருந்து கவினின் உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் கிராமத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு கவினின் சொந்த ஊரான ஆறுமுகமங்கலத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படவுள்ளது. முன்னதாக, அமைச்சர் கே.என். நேரு மருத்துவமனையில் கவினின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
இதற்கிடையே நேற்று இரவு 11 மணியளவில் தவெக தலைவர் விஜய், கவினின் இல்லத்திற்கு ஆறுதல் கூற வருவதாக தகவல் பரவியது. இதனையறிந்து கவின் வீட்டின் முன் உறவினர்கள் திரண்ட நிலையில், கவினின் தந்தை சந்திர சேகர் வீட்டின் வாசலில் காத்திருந்தார். அப்போது திடீரென வந்த காரை பார்த்த அனைவரும் விஜய் வந்ததாக எண்ணி காரை நோக்கி சென்றனர். ஆனால் அது திருச்செந்தூர் செல்ல வழி தவறி வந்தவர்கள் என்று தெரிந்ததும் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது.
Read more: ஆரஞ்சு அலர்ட்.. கொட்டித் தீர்க்க போகும் கனமழை.. இந்த மாவட்ட மக்கள் உஷராக இருங்க..!!