தொழிலாளர்களுக்கு சிறப்பான ஊதியம் மற்றும் சமூகப் பாதுகாப்பை வழங்க தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் வழிவகுக்கின்றன என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஊதிய சட்டத்தொகுப்பு 2019, தொழில் உறவுகள் சட்டத்தொகுப்பு 2020, சமூகப் பாதுகாப்பு சட்டத்தொகுப்பு 2020 தொழில்துறை சார்ந்த பாதுகாப்பு, சுகாதாரம், பணிநிலை சட்டத்தொகுப்பு 2020 ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் தொழிலாளர் சட்டத்தொகுப்புகள் 2025 நவம்பர் 21 முதல் அமலுக்கு வரும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே இருந்த 29 தொழிலாளர் சட்டங்களை சீரமைத்து புதிய சட்டத்தொகுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இது குறித்து கருத்துத் தெரிவித்த தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தின் மண்டல இயக்கநர், இந்த சட்டத் தொகுப்புகள், வணிகம் செய்வதை எளிதாக்குவதோடு தொழிலாளர் நலன்களை உறுதி செய்கிறது என்றார். நாட்டின் தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பு 2015-ல் 19 சதவீதமாக இருந்த நிலையில், 2025-ல் 64 சதவீதமாக அதிகரித்துள்ளது என்றும் இது தொழிலாளர்களின் கண்ணியத்தை உறுதி செய்துள்ளது என்றும் அவர் கூறினார்.
மேலும் தொழிலாளர்களுக்கு குறிப்பாக பெண்கள், இளைஞர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள், செயலி தொழிலாளர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஆகியோருக்கு இந்த சட்டத்தொகுப்புகள் மிகவும் பயனுடையவையாக உள்ளன என்றார்.



