பிரபல திரைப்பட நடிகர் விக்ரம் வளர்த்து வரும் லார் கிப்பான் வகை குரங்கு குறித்து உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு தமிழ்நாடு வனத்துறை அதிகாரிகள் அவருக்கு அதிரடியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
நடிகர் விக்ரம், லார் கிப்பன் (Lar Gibbon) என்ற சிறிய வகை அரிய குரங்குடன் விளையாடும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. விக்ரமின் முடியைப் பிடித்து இழுத்தபடி அந்த அரிய வகை குரங்கு அவருடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் அந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி, காட்டுத்தீ போல பரவியது. அது பலரின் விருப்பங்களைப் பெற்றாலும், வனவிலங்கு ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பையும் எதிர்ப்பையும் உருவாக்கியது. இதன் காரணமாக அந்த வீடியோ சமூக வலைதளத்தில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டது.
இருப்பினும், அந்தப் பதிவு நீக்கப்பட்டதோடு இந்த விவகாரம் முடிவுக்கு வரவில்லை. அந்த வீடியோ சென்னை ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டில் (ECR) உள்ள ஒரு தனியார் இல்லத்தில் படமாக்கப்பட்டதாகத் தெரிந்ததையடுத்து, அந்த அரிய வகை குரங்கு சென்னைக்கு எப்படி வந்தது என்பது குறித்த விசாரணையைத் தமிழ்நாடு வனத்துறை முடுக்கிவிட்டுள்ளது.
அதன் ஒருபகுதியாக, நடிகர் விக்ரமிடம், இந்த அரிய வகை குரங்கு தொடர்பாக அதை வாங்கிய விவரங்கள் மற்றும் சட்டப்பூர்வ உரிமையாளர் ஆவணங்களை அளிக்குமாறு வனத்துறை சார்பில் ஏற்கனவே கேட்கப்பட்டிருந்தது. இருப்பினும், இதுவரை விக்ரம் தரப்பிலிருந்து எவ்வித விளக்கமோ அல்லது ஆவணங்களோ வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, நேற்று அவர் படப்பிடிப்பில் இருந்த இடத்திற்கே நேரில் சென்ற வனத்துறை அதிகாரிகள், இந்த நோட்டீஸை அவரிடம் நேரடியாக வழங்கியுள்ளனர். அதில், குரங்கு தொடர்பான அனைத்து உரிய ஆவணங்களுடன் இன்னும் மூன்று நாட்களுக்குள் வனத்துறை அலுவலகத்திற்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட மூன்று நாட்களுக்குள் நேரில் வந்து ஆவணங்களைச் சமர்ப்பித்து முறையான விளக்கம் அளிக்காவிட்டால், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் விக்ரம் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



