தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” தொடக்க விழா நடைபெறும் இடம், பாதுகாப்பு காரணங்களால் உசிலம்பட்டியிலிருந்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் மீதான மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தவும், தமிழர் மரபில் தொன்றுதொட்டு வரும் தாய்மாமன் சீர்முறையைப் பிரதிபலிக்கும் வகையிலும் ‘வெற்றித் தமிழகம் தொலைநோக்குத் திட்டம்’ வாயிலாக இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2026 ஜூன் 22 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் எடையிலான தங்க மோதிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான அரசாணை ஜூன் 23 அன்று வெளியிடப்பட்டது. இத்திட்டத்திற்காக அரசு தரப்பில் ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அனைத்து முன்னேற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டன.
இந்நிலையில், இத்திட்டத்தின் அதிகாரப்பூர்வ தொடக்க விழா முதலில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அங்கு நிலவும் பாதுகாப்பு விவகாரங்கள் மற்றும் நிர்வாக காரணங்களை கருத்தில் கொண்டு, விழாவை மதுரை ராஜாஜி அரசு தலைமை மருத்துவமனைக்கு மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து, புதிய விழா நடைபெறும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அதற்கான சிறப்பு முன்னேற்பாட்டுப் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
Read More : வடகிழக்கு பருவமழை..!! முதல்வர் விஜய் அவசர ஆலோசனை..!! மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு..!!



